பிரபல செஸ் விளையாட்டு வீரர் ஒருவர், விதிகளுக்கு புறம்பாக விளையாட்டு போட்டிக்கு நடுவில் கழிவறையில் மொபைல் போன் பயன்படுத்திய சம்பவம் அவரது விளையாட்டு வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
லாத்வியா, பங்களாதேஷ், மற்றும் செக் குடியரசு சார்பில் விளையாடியவரான Igors Rausis, விளையாட்டுப் போட்டிக்கு நடுவில், கழிவறையில் மொபைல் போன் பயன்படுத்தும்போது கையும் களவுமாக சிக்கியதையடுத்து, பொலிசார் அவரை விசாரித்து வருகிறார்கள்.
சில செஸ் ஆப்கள், ஜெயிக்கும் ’மூவ்’களை கற்றுத்தரும் என்பதால், செஸ் விளையாட்டுகளின்போது மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வயதான செஸ் வீரர்களின் திறமை மங்கி வரும் நேரத்தில், 58 வயதான Rausis பல வெற்றிகளைப் பெற்று சிறந்த வீரர்களில் 40 ஆவது இடத்தை எட்டியிருந்தது பலரது பாராட்டைப் பெற்றாலும், சிலருக்கு சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இந்த வயதில் இப்படி இளைஞர்களைத் தாண்டி ஒருவர் வெற்றி பெறலாம் என்றால், வயதுக்கும் செஸ் விளையாட்டுத் திறமைக்கு சம்பந்தமே இல்லை என உலகமே அவரை வியந்து பார்த்தது.
இதற்கிடையில் கடந்த வாரம் ஒரு விளையாட்டு வீரர், Rausis கணினியின் உதவியோடு ஏமாற்றி வருவதாக ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்.
சர்வதேச செஸ் விளையாட்டு அதிகாரிகளுக்கும் இந்த தகவல் எட்டவே, பிரான்சில் அவர் விளையாடும் நாளுக்காக காத்திருந்தார்கள் அவர்கள்.
அப்படியிருக்கும் நிலையில் விளையாட்டின் நடுவே கழிவறைக்கு சென்ற Rausis மொபைல் போன் பயன்படுத்துவது புகைப்படம் எடுக்கப்பட்டது.
கையும் களவுமாக சிக்கிய நிலையிலும், Rausis செஸ் ஆப் ஒன்றை பயன்படுத்தினாரா என்பது உறுதி செய்யப்படாவிட்டாலும், விளையாட்டின்போது மொபைல் பயன்படுத்தக்கூடாது என்ற விதியை அவர் மீறியுள்ளார்.
பின்னர் கழிவறையில் இருந்தது, தன்னுடைய மொபைல் போன்தான் என Rausis எழுதிக் கையெழுத்திட்டுக் கொடுத்துள்ளார்.
பல்வேறு இளம் விளையாட்டு வீரர்களுக்கு முன்மாதிரியாக கருதப்பட்ட ஒரு வீரர், இப்படி மோசடி செய்து சிக்கி தனது விளையாட்டு வாழ்க்கையையே நாசம் செய்து கொண்டுள்ள சம்பவம், செஸ் விளையாட்டு வீரர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.