பெண் சபலத்தால் சரிந்த சரவணபவன் உரிமையாளர்!

ஜீவஜோதி கணவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபால் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து ராஜகோபால் சென்னை ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது அவருக்கு ஐகோர்ட்டு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து ராஜகோபால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். அப்போது அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது.

இந்த நிலையில் ராஜகோபால் கடந்த 7ம் திகதிக்குள் கோர்ட்டில் சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அவர் தனக்கு நரம்பு தளர்ச்சி நோய் இருப்பதாக கூறி சரண் அடைவதில் இருந்து விலக்கு கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அப்போது ராஜகோபால் உடனடியாக சரண் அடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து ராஜகோபால் கடந்த 9-ம் திகதி மாலை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தார்.

ஸ்டெச்சரில் படுத்துக் கொண்டிருந்த ராஜகோபாலை நீதிபதி முன்பு ஆஜர்படுத்த அழைத்து சென்றனர்.

அவரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஜெயிலில் அடைக்கும் முன்பு அவரை மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் இருப்பது தெரிய வந்தது. அவர் மூளை பாதிப்பு, நுரையீரலில் தண்ணீர், சிறுநீரக பிரச்சினை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவரை உள் நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள். அதற்கு பொலிசார் ஒத்துக் கொள்ள வில்லை.

ராஜகோபாலுக்கு ஆக்சிஜன் குறைவு காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது என்று போலீசாரிடம் டாக்டர்கள் கூறினார்கள். இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர்.

அவருக்கு கடந்த 6 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ராஜகோபாலின் உடல் நிலை நேற்று இரவு திடீரென்று கவலைக் கிடமானது.

அவரது நாடித் துடிப்பு குறைந்தது. இதையடுத்து இரவு 11 மணியளவில் அவருக்கு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் சிகிச்சை பெறும் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.