காலையில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட அவலம்!

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது இறுதிச் சடங்கிற்கு பணத்தினை தங்கையிடம் கொடுத்துவிட்டு அப்பா, அண்ணன், அக்கா தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் துரைராஜ் 70 வயது. இவருக்கு சாந்தி, செல்வி என்று 2 மகள்களும் கோபாலகிருஷ்ணன்(37) என்ற மகனும் உள்ளனர்.

மூத்த மகள் செல்வி கணவனை இழந்ததால் அப்பாவுடன் வசித்து வந்துள்ளார். பின்பு மகன் கோபால கிருஷ்ணன் 37 வயதாகியும் திருமணமாகததால் தந்தையுடனே வசித்து வந்துள்ளார். இதனால் மூன்று பேருமே சோகத்தில் இருந்துள்ளனர்.

இந்நிலையில் தனது இளைய மகள் சாந்தி வீட்டிற்குச் சென்ற மூன்று பேரும் அங்கு பாசமாக பேசி மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். பின்பு வீடு திரும்புவதற்கு முன்பு சாந்தியின் அண்ணன் அவரது கையில் 30 ஆயிரம் ரூபாவும், பத்திரத்தையும் கொடுத்துள்ளார்.

அண்ணனிடம் பணம் எதற்கு என்று கேட்டதற்கு, அவசர செலவு வரும் அப்போ இதை பயன்படுத்திக்கொள் என்று கூறியுள்ளார். வீட்டு பத்திரத்தை குறித்து கேட்டதற்கு நம்ம வீட்டில் இருப்பதோடு உனது வீட்டில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று கூறிவிட்டு சென்றுள்ளனர்.

மறுநாள் காலையில் வெகுநேரமாகியும் துரைராஜ் வீடு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது துரைராஜ், செல்வி, கோபாலகிருஷ்ணன் 3 பேருமே தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர். செல்விக்கு லேசான உயிர் இருந்துள்ளது. துரைராஜ், கோபாலகிருஷ்ணனுக்கு ஏற்கெனவே உயிர் பிரிந்திருந்தது. செல்வியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற வேலை அவரது உயிரும் பிரிந்துள்ளது.

விடயம் தெரிந்த சாந்தி 3 பேரின் சடலத்தை அவதானித்து கதறி அழுதுள்ளார். கோபாலகிருஷ்ணனிடம், “இதுக்குதான் பணம் தந்தியா அண்ணா” என்று கேட்ட கேள்வி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

இறுதி சடங்குக்கு தேவையான தொகையை தந்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.