மகள் வயது காதலியுடன் உல்லாசமாக சுற்றிய கணவன்!

தமிழகத்தின் நெய்வேலியில் கணவனை குடியிருப்புக்குள் வைத்து அடித்துக் கொலை செய்து, சடலத்தை மூட்டையாக கட்டி, காரோடு சேர்த்து தீவைத்த சம்பவம் தொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே செம்பாகுறிச்சி வனப்பகுதி சாலையில், செவ்வாய்க் கிழமை இரவு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது.

அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனக்காப்பாளர் ஒருவரும், ரோந்து காவலரும் அங்கு சென்றதும், அருகில் நின்றிருந்த 3 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

உடனடியாக அருகிலுள்ள கீழ்குப்பம் காவல் நிலைய பொலிசாருக்கு தகவல் தெரிவித்த அவர்கள், காரின் முன்பக்க டயரில் எரிந்து கொண்டிருந்த தீ பெரிய அளவில் பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் காரில் சோதனை மேற்கொண்ட போது, காரின் பின் இருக்கைக்கு இடையில் சாக்குப் மூட்டை ஒன்று இருந்தது.

அந்த மூட்டையை அவிழ்த்து பார்த்த போது, அதனுள் தலையில் வெட்டுக்காயங்களுடன் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ந்து போயினர்.

அந்த சடலத்தின் சட்டைபையில் நெய்வேலி என்.எல்.சி பணியாளருக்கான அடையாள அட்டை இருந்தது.

மேலும் காரில் இருந்த செல்போன் மற்றும் காரின் பதிவெண்ணை வைத்து கொலை செய்யப்பட்டது கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் நெல்லிக்கனி தெருவைச் சேர்ந்த என்.எல்.சி. அதிகாரியான பழனிவேல் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இதனையடுத்து கீழ்குப்பம் பொலிசார், பழனி வேலின் வீட்டிற்குச் சென்ற போது மனைவி மஞ்சுளா எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் கணவர் வெளியில் சென்றிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கணவர் கொல்லப்பட்ட தகவலை தெரிவித்த போதும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து வீட்டிற்குள் பார்த்த போது சுவற்றில் ரத்த துளிகள் இருந்துள்ளது.

மேலும் அந்த அறையின் தரை பகுதி முழுவதும் ஈரமாக காட்சி அளித்தது . இதையடுத்து மஞ்சுளாவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்த போது பழனிவேல் கொலைக்காண மர்மம் வெளிச்சத்திற்கு வந்தது.

சுமார் ஒன்றரை லட்சம் ஊதியத்தில் என்.எல்.சி. நிறுவனத்தில் சிறப்பு அதிகாரியாக பணியில் இருந்த 52 வயதான பழனிவேல் தன்னுடைய சம்பளத்தில் தனது மனைவி மஞ்சுளாவுக்கோ, 2 மகள் ஒரு மகனுக்கோ எதுவும் பெரிதாக செலவு செய்வதில்லை.

சிக்கனமாக இருப்பதாக காட்டிக் கொண்டு, இரு பெண்களுடன் வயதுக்கு மீறிய பழக்கம் வைத்திருந்ததாக கூறப்படுகின்றது.

தந்தையின் நடவடிக்கை பிடிக்காமல் மூத்த மகள் வீட்டை விட்டு சென்று காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வீட்டுச்செலவுக்கு பணம் கேட்டால் மஞ்சுளாவுக்கு சரமாரியாக அடி கிடைக்கும் என்றும் கூறப்படுகின்றது.

மனைவியை வெளியே அழைத்து செல்ல மறுத்த பழனிவேல் தனது காதலிகளுடன் காரில் உல்லாசமாக சுற்றி திரிந்ததை தட்டிகேட்ட மனைவியின் தம்பி ராமலிங்கத்தை வீட்டுக்குள் வரகூடாது என்று தடுத்துள்ளார் பழனிவேல்.

கணவனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து சென்ற நிலையில் தனது தம்பியுடன் சேர்த்து கணவனை தீர்த்துக் கட்ட மஞ்சுளா திட்டமிட்டுள்ளார்.

அதன்படி செவ்வாய்கிழமை மாலை பணி முடிந்து திரும்பிய பழனிவேலுவை தம்பி ராமலிங்கம் மற்றும் அவனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி கொடூரமாக கொலை செய்ததாகவும்,

வீடு முழுவதும் சிதறிய ரத்தத்தை மறைக்க தண்ணீர் விட்டு கழுவி விட்டதையும் காவல்துறையினர் கண்டறிந்தனர்.

மேலும் சடலத்தை மூட்டையாக கட்டி காதலிகளுடன் அவர் சுற்றி திரிந்த அதே காருடன் தீவைக்க முடிவு செய்துள்ளனர்.

அதன்படி காரின் முன் சக்கரத்தில் மண்ணென்னை ஊற்றி தீவைத்துக் கொண்டிருந்தபோது பொலிசார் வருவதை பார்த்து தப்பி ஓடியது தெரியவந்துள்ளது.

முன்னதாக வீட்டில் இருந்த தனது மகனை வெளியில் அனுப்பிவிட்டு அந்த கொலை சம்பவத்தை செய்துள்ளார் மஞ்சுளா என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைவழக்கில் மஞ்சுளாவை கைது செய்துள்ள பொலிசார் தப்பி ஓடிய ராமலிங்கத்தையும் அவனது கூடாளிகளையும் தேடிவருகின்றனர்.