தமிழகத்தில் ஜீவஜோதி கணவன் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த சரவணன் பவன் ராஜகோபல் இன்று உடநிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலையில், 16 ஆண்டுகளுக்கு முன் ஜீவஜோதி அளித்த சாட்சியத்தை பற்றி பார்ப்போம்.
உலகெங்ககும் தன்னுடைய ஹோட்டல்களால் கொடி கட்டி பறந்த சரவணபவன் ராஜகோபால், பிரின்ஸ் என்பவரின் மனைவியான ஜீவஜோதி என்ற பெண்ணை திருமணம் செய்ய நினைத்து கடைசியில் சரிந்தார்.
அப்படி 16- ஆண்டுகளுக்கு முன்பு சென்னை பூந்தமல்லி கூடுதல் நீதிமன்றத்தில், ஜீவஜோதி அளித்த கண்ணீர் சாட்சியம்.
அதில், நான் கடந்த 1994-ஆம் ஆண்டு சென்னைக்கு பிழைப்புக்காக குடும்பத்துடன் வந்தேன். அப்போது சென்னை கே.கே.நகரில் இருக்கும் சரவண பவன் ஹோட்டலில் என் சித்தப்பா தட்சிணாமூர்த்தி மேலாளராக இருந்தார்.
அவரிடம்தான் நாங்கள் சொத்தை விற்று கையில் இருந்த 4.5 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து தொழில் செய்யலாம் என முடிவு செய்திருந்தோம்.
அவரோ, அந்த பணத்தை கொடுங்க, சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலிடம் கொடுத்து மாதந்தோறும் வட்டி வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்.
இதையடுத்து ராஜகோபாலும் மாதம் தோறும் 7,000 ரூபாய் வரை வட்டியாக கொடுத்து வந்தார். அசோக் நகர் கிளையில் இருக்கும் சரவணபவன் ஹோட்டலில் என் தந்தைக்கு ராஜகோபால் வேலை கொடுத்தார். அதுமட்டுமின்றி கே.கே.நகரில் உள்ள சரவணபவன் ஊழியர் குடியிருப்பில் வசிக்கவும் அவர் அனுமதி அளித்தார்.
அப்போது தான் அந்த வீட்டில் என் தம்பிக்கு டியூசன் எடுப்பதற்காக பிரின்ஸ் சாந்தகுமார் வந்தார். முதலில் நண்பர்களாக பேசி வந்தோம், அதன் பின் இருவருக்கும் காதல் உருவானதால், இதை அறிந்த ராஜகோபாலுக்கு பிடிக்கவில்லை.
அதன் காரணமாக பிரின்ஸ் எங்கள் வீட்டிற்கு வரக் கூடாது என்று கூறி, என் அப்பாவிடம் வற்புறுத்தினார். ஆனால் அப்பா ஏற்க மறுத்ததால், அதன் பின் சிறிய பிரச்சனை காரணமாக, அப்பா அவரிடம் கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ஹோட்டல் வேலையை விட்டும் வெளியே வந்தார்.
அந்த பணத்தை வைத்து நாங்கள் செய்த தொழில் நஷ்டம் ஏற்பட்டது. இதற்கிடையில் ராஜகோபால், சாந்தகுமார் வீட்டுக்கு வருவதை உடனடியாக நிறுத்தாவிட்டால் வீட்டை காலி செய்ய வேண்டும் என்று ராஜகோபால் கூறினார்.
அதன் பின் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வேறு வீடு பார்த்து குடியேறினோம். பின்னர் எனது தந்தை வேலைக்காக மலேசியா சென்று விட்டார்.
எங்கள் காதல் விவகாரம் என் அம்மாவிற்கு தெரியவர, அவர் எதிர்த்தார். இதன் காரணமாக, இவர் எங்களை பிரித்துவிடுவார் என்று எண்ணி நானும், சாந்தகுமாரும் அண்ணா நகரில் உள்ள பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம்.
பின்னர் மதுரை சென்று விட்டோம். அங்கு சாந்தகுமாரின் பெற்றோர் எங்களை ஏற்றுக் கொள்ளாததால், ஒன்றும் தெரியாமல் அம்மாவைத் தொடர்பு கொண்டேன்.
அவர் மதுரைக்கு வந்து எங்களை ஏற்றுக் கொண்டு சென்னைக்கே திரும்ப அழைத்து வந்தார். இங்கு வந்த பிறகு வேளச்சேரியில் ஒரு வீட்டில் குடியேறினோம். டிராவல்ஸ் பிசினஸ் செய்யலாம் என்று நினைத்தோம். கையில் பணமில்லாததால், பணத்திற்காக ராஜகோபாலையே அணுகினோம்.
அவரும் கடன் கொடுத்தார். அவர் தான் தலைமை தாங்கி டிராவல்ஸ் நிறுவனத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர் அடிக்கடி எனது வீட்டுக்குத் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்தார்.
அப்படி பேசும் போது அவரின் சில பேச்சுக்கள் எனக்கு கட்டளையிடுவது போன்று இருக்கும், அவர் பேசுவது, என்னை கணவரிடமிருந்து பிரிப்பது போலே இருந்தது.
ஒரு முறை அவர் எனது கணவருக்கு எய்ஸ்ட் நோய் இருப்பதாகவும், என்னை சினிமாவில் சேர்த்து விட பிரின்ஸ் முயற்சிப்பதாகவும் கூறினார்
மேலும் நீ சினிமாவில் சேருவது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறிய போது, நான் அதுபற்றி நான்தான் கவலைப்பட வேண்டும், நீங்கள் கவலைப்பட அவசியமில்லை என்று கூறினேன்.
2001-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் திகதி ராஜகோபாலும், அவரது ஆட்களும் எங்களது வேளச்சேரி வீட்டுக்கு வந்திருந்தனர்.
பேச வேண்டும் என்று கூறி என் கணவர், தாய், தந்தை மற்றும் என்னை வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் அசோக் நகரில் உள்ள சரவண பவன் குடோனுக்குக் கொண்டு சென்று அங்கு வைத்து எனது கணவரை ராஜகோபாலும், அவரது அடியாட்களும் அடித்து, உதைத்தனர்.
என்னை ஒத்துப் போய்விடு என்று வற்புறுத்தினர். என்னை மூன்றாவது திருமணம் செய்து கொள் என்று கூறி, மிரட்டி விட்டுவிட்டார்.
இது தொடர்பாக அப்போதைய போலீஸ் கமிஷ்னரிடம் புகார் செய்தோம். இதையறிந்த ராஜகோபால் தனது அடியாட்களுடன் மீண்டும் எங்களை மிரட்டினார். கணவர் சாந்தகுமார் மற்றும் என்னை திருநெல்வேலிக்கு பக்கம் வரை அழைத்துச் சென்று என்னை விட்டு விட்டு, கணவரை வேறு எங்கோ அழைத்துச் சென்று விட்டனர்.
2001, அக்டோபர் 21-ஆம் திகதி எனது கணவர் போன் முலம் தொடர்பு கொண்டு, அண்ணாச்சியின் ஆளான டேனியல், அவன் அண்ணாச்சியுடன் வேலை செய்பவன், என்னை மும்பைக்கு சென்றுவிடுமாறு மிரட்டுவதாகக் கூறினார். அதன் பின் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
இதனால் நவம்பர் 10-ஆம் திகதி நான் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தேன். அப்போது தான் டிசம்பர் 1-ஆம் திகதி கொடைக்கானலில் அடையாளம் தெரியாத பிணம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்து அங்கு சென்று அது என் கணவர்தான் என்று அடையாளம் காட்டினேன்.
எனது கணவரைக் கடத்திச் சென்று கொலை செய்து கொடைக்கானலில் பிணத்தைப் போட்டது ராஜகோபாலும், அவரது அடியாட்களும்தான் என்று அப்போது கண்ணீர்மல்க நீதிமன்றத்தில் ஜீவஜோதி வாக்குமூலம் கொடுத்தார்.