3 மாதம் சீரழிக்கப்பட்ட சிறுமி… தப்பியோடிய குற்றவாளி!

கேரளாவில் சிறுமியை சீரழித்துவிட்டு சவுதிக்கு தப்பியோடிய குற்றவாளியை அங்கு வைத்தே கைது செய்த பெண் பொலிஸாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சவுதி அரேபியாவிற்கு குடிபெயர்ந்த சுனில் குமார் பத்ரன் (38) விடுமுறைக்கு மட்டுமே கேரளா வந்து செல்லும் பழக்கமுடையவர்.

கடந்த 2017ம் ஆண்டு விடுமுறையில் கேரளா வந்த இவர், நண்பர் ஒருவரின் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கிருந்த 13 வயது சிறுமியை மூன்று மாதம் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனால் மனதளவில் பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்தவை குறித்து தன்னுடைய பெற்றோரிடம் கூறிவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதற்கிடையில் அந்த கொடூரன் மீண்டும் சவுதிக்கு தப்பியோடியுள்ளான். இது சம்மந்தமாக வழக்கு பதிவு செய்த பொலிஸார், 2017 ல் பத்ரானுக்கு இன்டர்போல் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். ஆனால் அதன் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஜூன் மாதம் புதிதாக நியமிக்கப்பட்ட கொல்லம் பொலிஸ் கமிஷனர் மெரின் ஜோசப், பதிவியேற்றத்திலிருந்து நிலுவையில் உள்ள வழக்குகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள்.

அந்த வரிசையில் 13 வயது சிறுமியின் வழக்கினை தூசிதட்டி எடுத்து துல்லியத்தன்மையுடனும் வேகத்துடனும் நகர்த்தினார்.

சி.பி.ஐ., சர்வதேச பொலிஸார் மற்றும் சவூதி பொலிஸார் என பல்வேறு துறையினரை தொடர்புகொண்டு ஆவண நடைமுறைகளை முடித்தார். இதனைத் தொடர்ந்து சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கு தனது குழுவினருடன் சென்ற மெரின், குற்றவாளியை கைது செய்து கேரளாவிற்கு அழைத்து வந்துள்ளார்.

இவரது கடமையை தற்போது பொதுமக்கள் பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.