அரிதான நோயால் உயிருக்கு போராடும் பச்சிளம் குழந்தை!

கனடாவின் ஆல்பர்ட்டாவில் அரிதான நோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் பச்சிளம் குழந்தைக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் களமிறங்கியுள்ளனர்.

ஆல்பர்ட்டாவின் ஸ்டர்ஜன் கவுண்டி பகுதியில் குடியிருக்கும் இயன் மற்றும் ஹேலி தம்பதிக்கு பிறந்த ஹட்சன் கோவி என்ற பச்சிளம் குழந்தையே அரிதான நோயால் உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 23 ஆம் திகதி பிறந்த குழந்தை ஹட்சனுக்கு SCID எனப்படும் நோயெதிர்ப்பு தொடர்பான நோய் இருப்பதாக அவர்களது குடும்ப மருத்துவர் தெரிவித்துள்ளார்.

சிறிதாக ஏற்படும் நோய் தொற்று கூட குழந்தை ஹட்சனின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதால், இயன் மற்றும் ஹேலி தம்பதி மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகின்றனர்.

இதனால் இருவருக்கும் பணிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2 அல்லது மூன்று மாத காலத்திற்குள் குழந்தை ஹட்சனுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக உரிய நன்கொடையாளர்களை திரட்டும் பணி நண்பர்கள் மற்றும் உறவினர்களால் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

வார இறுதியில் செயின்ட் ஆல்பர்ட் மற்றும் எட்மண்டன் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட நன்கொடையாளர்களை தேடும் பணியில் சுமார் 237 பேர் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.