வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் உரிமைப் பிரச்சனைகளில் தலையிடுவதில்லையென்ற முடிவிற்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளார் அமைச்சர் மனோ கணேசன்.
தமிழ் மக்களின் அவசர பிரச்சனைகள் தொடர்பில் ஆராய நேற்று மனோ கணேசன் தலைமையில் ஏற்பாடாகியிருந்த அவசர கலந்துரையாடலை, அரசியல் காரணங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தவிர்த்திருந்தது.
மனோ கணேசனின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த கூட்டத்தில் சாதகமான முடிவுகள் எடுக்கப்பட்டால், அது மனோ கணேசனின் புகழை அதிகப்படுத்தும் என கூட்டமைப்பு கருதியதால் நேற்றைய சந்திப்பை தவிர்த்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மனோ கணேசன்-
“வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமை சார்ந்த விடயங்களில் இனிமேல் தலையிடுவதில்லையென நேற்றிரவு முடிவெடுத்தேன்.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கேட்டுக் கொள்ளாமல் இனிமேல் தலையிடுவதில்லை, இனிமேல் அமைச்சு சார்ந்த விடயங்களை மட்டும் செய்வேன்.
மக்கள் நலன்சார்ந்து நான் செயற்படுவதை சிலர் தவறாக அர்த்தப்படுத்துவதாலேயே மனவருத்தத்துடன் இந்த முடிவை எடுத்தேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களிற்கு ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் அவகாசம் போதவில்லையென்கிறார்கள்.
இது அவசர சந்திப்பு. முதல்நாள் இரவு சந்திப்பிற்கு அழைப்பு விடுத்தோம். மறுநாள் 11.30 மணிக்கே சந்திப்பு. ஜனாதிபதி மீது விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக காத்திருந்தார்.
அரை மணித்தியாலயம் வரை ஜனாதிபதி காத்திருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பு வருமா என கேட்டபடியிருந்தார். நானும் வருவார் வருவார் என சொல்லிக் கொண்டிருந்தேன். 12 மணிவரை காத்திருந்து, அதற்கு மேலும் பொறுக்க முடியாமலே கூட்டத்தை ஆரம்பித்தோம்.
கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் ஆயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரமில்லை. கொழும்பிலும் உறுப்பினர்கள் தங்கியிருந்தனர்.
இதைப்பற்றி நான் அதிகம் கதைத்து, மக்கள் மத்தியில் எம்மைப்பற்றிய அபிப்பிராயத்தை தாழ்த்திக் கொள்ள விரும்பவில்லை.
இரா.சம்பந்தனையும் அழைத்துக் கொண்டு கூட்டத்திற்கு வருவதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிறிதரன், டக்ளஸ் தேவானந்தா, சரவணபவன் ஆகியோரே தொலைபேசியில் தொடர்புகொண்டு வர முடியாதென்றார்கள்.
இது மனவருத்தமானது. இதைப்பற்றி நான் அதிகமாக கதைக்க விரும்பவில்லை“ என்றார்.