தடுப்பூசி போடாத குழந்தைகளின் பெற்றோருக்கு அபராதம்!

தங்கள் பிள்ளைகளுக்கு அம்மை நோய்க்கான தடுப்பூசி போடாத பெற்றோருக்கு கடுமையான அபராதம் விதிக்க ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

ஜேர்மனியில் மண்ணன் அல்லது மணல்வாரி எனப்படும் measles நோய் மீண்டும் அதிகம் பரவலாம் என்னும் அச்சம் உருவாகியுள்ள நிலையில், அதற்கான தடுப்பூசி போடாத, பள்ளி செல்லும் வயதுடைய பிள்ளைகளின் பெற்றோருக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை ஜேர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் முன்வைத்துள்ளார்.

ஜேர்மன் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் Jens Spahn, தங்கள் பிள்ளைகளுக்கு மணல்வாரி நோய்க்கு தடுப்பூசி போட்டதை நிரூபிக்க முடியாத பெற்றோருக்கு 2,500 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்றார்.

இந்த திட்டம் சட்டமாக்கப்படுவதற்குமுன் ஜேர்மன் நடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

என்றாலும் ஏற்கனவே அரசுக்கு அறுதிப்பெரும்பான்மை இருப்பதால் எளிதில் அச்சட்டம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுப்பாட்டில் இருப்பதாக ஒரு காலத்தில் கருதப்பட்ட மணல்வாரி நோய், மீண்டும் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தடுப்பூசி போட மறுத்து வருகின்ரனர்.

தடுப்பூசி போடுவதால் தங்கள் பிள்ளைகளுக்கு ஆட்டிசம் முதலான பிரச்சினைகள் ஏற்படலாம் என்னும் அச்சத்தாலேயே பல பெற்றோர்கள் தடுப்பூசி போட மறுத்து வருகின்றனர்.

ஜேர்மனியில் 2019ஆம் ஆண்டில் இதுவரை 400 பேர்வரை மணல்வாரி அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது 2017 ஐ விட குறைவு என்றாலும், 2018ஐ விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொகையில் 95 சதவிகிதத்தினர் தடுப்பூசி போட்டிருந்தால் மணல்வாரி அம்மை நோய் பரவ முடியாது என்றும் நன்றாக கட்டுப்படுத்தப்பட முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நவ யுக தடுப்பூசிகள் பரவலாக பயன்படுத்தபடும் கால கட்டத்திற்குமுன் மணல்வாரி அம்மை நோய் கிட்டத்தட்ட ஆண்டொன்றிற்கு, 2.6 மில்லியன் மக்களை கொல்வதுண்டு.

தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும், ஆண்டொன்றிற்கு 100,000க்கும் அதிகமானோர் மணல்வாரி அம்மை நோய்க்கு பலியாவதை மறுக்க இயலாது.