சீனாவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் கடத்தப்பட்ட சிறுவனை FaceApp போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொலிசார் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தற்போது 21 வயதாகும் Yu Weifeng பொலிசார் ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, தமது பெற்றோருடன் இணைந்துள்ளார்.
நீண்ட 18 ஆண்டுகளுக்கு பின்னர் தங்களது மாயமான மகனை கண்டுபிடித்த மகிழ்ச்சியில் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கண்கள் கலங்க வரவேற்றுள்ளனர்.
சீனாவின் பிரபல தொழில்நுட்ப குழுமம், தற்போது உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள FaceApp தொழில்நுட்பத்தை மாதிரியாக கொண்டு செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது.
அதில் மாயமான சிறுவன், ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு காணப்படுவான் என்ற ஆய்வில் இரண்டு மாதங்கள் செலவிட்டு, சுமார் 100 மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இறுதியில் மாயமான சிறுவனை கண்டறிந்துள்ளது.
தொடர்ந்து டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உறுதி செய்யப்பட்ட பின்னரே, அந்த இளைஞரின் உண்மையான பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு மே மாதம் Yu Weifeng மாயமானதாக கூறப்படுகிறது. கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் குடும்பம் ஒன்று குறித்த சிறுவனை லீ என்ற பெயரில் தத்தெடுத்து வளர்த்துள்ளது.
சிறுவன் மாயமான விவகாரம் புகாராக அளிக்கப்பட்ட நாள் முதல் சீனா பொலிசார் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தி வந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் தொழில்நுட்பம் பெரும் சவாலாக இருந்ததால் கால தாமதம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.