வெறும் இரண்டு ஜோடி ஜீன்ஸ் மற்றும் ஒரு துருப்பிடித்த ட்ரக்குடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த ஒரு தச்சர், தனது மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி பயில்வதற்கு உதவியாக, 3 மில்லியன் டொலர்கள் சேர்த்து வைத்திருந்த விடயம் அவர் இறப்பதற்கு சற்று முன் தான் உலகுக்கு தெரியவந்துள்ளது.
இந்த மனதை நெகிழச் செய்யும் சம்பவம் அமெரிக்காவின் Iowa மாகாணத்தில் நடைபெற்றுள்ளது.
2005இல் தான் உயிரிழக்கும் தருவாயில் Dale Schroeder (67) தான் சேமித்து வைத்திருந்த 3 மில்லியன் டொலர்களை Iowa மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்பாக வழங்க முடிவு செய்துள்ளார்.
ஏழையாக வளர்ந்த Dale, கல்லூரிக்கு செல்லவும் இல்லை, திருமணம் செய்து கொள்ளவும் இல்லை, அவர் இறக்கும்போது உறவென்று கூறிக்கொள்ள யாரும் இல்லவும் இல்லை… ஆனால் இன்று ஒரு பெருங்கூட்டமே தங்களை Daleஇன் குழந்தைகள் என்று பெருமையுடன் அழைத்துக் கொள்கிறார்கள்.
ஆம், தான் இறப்பதற்கு முன் தனது வழக்கறிஞரை அழைத்த Dale, தனது சேமிப்பு முழுவதும் கல்லூரியில் சென்று படிக்கும் அளவுக்கு வசதியில்லாத மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டார்.
இதுவரை 33 மாணவர்களை, மருத்துவப்படிப்பு முதல் பல்வேறு பாடப்பிரிவுகளில் இலவசமாக படிக்க வைத்துள்ள அவரது ட்ரஸ்ட், 14 ஆண்டுகள் வரை மாணவர்களுக்கு அமுதசுரபியாக வாரி வழங்கிக் கொண்டே இருக்கும்.
சமீபத்தில் ஒன்று கூடிய, அவரால் கல்வி உதவி பெற்ற மாணவர்கள் பலர், கண்ணீர் மல்க Daleக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, தாங்கள் இன்று அவரால் எப்படி இருக்கிறோம் என்பது குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.