விழுப்புரம் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை காரில் கடத்தி சென்று பாதிவழியிலேயே இறக்கிவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பொறியியல் பட்டப்படிப்பு முடிந்த இளம்பெண் ஒருவருக்கு அடுத்த மாதம் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.
அதற்கான வேலைகளில் இளம்பெண் வீட்டார் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று குழாய் அடியில் துணிதுவைத்து கொண்டிருந்த இளம்பெண் திடீரென உதவி கேட்டு கூச்சலிட ஆரம்பித்துள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் அந்த இளம்பெண்ணை காரில் கடத்தி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து இளம்பெண்ணின் தந்தை பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த பொலிஸார், அருகில் உள்ள சோதனைச்சாவடிகளுக்கு தெரிவித்து மடக்கிப்பிடிக்க உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் அந்த இளம்பெண் புதுசேரியில் இருந்து தன்னுடைய தந்தைக்கு போன் செய்துள்ளார். அந்த நபர்கள் தன்னை பாதி வழியிலேயே இறக்கிவிட்டு சென்றதாக கூறியுள்ளார். தகவல் அறிந்து வேகமாக சென்ற பொலிஸார் இளம்பெண் மற்றும் கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அந்த இளம்பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதேபகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான தாமோதரன் தன்னை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவருடைய காதலை நிராகரித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாமோதரன் நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி புதுச்சேரிக்கு சென்றுள்ளார். ஆனால் சுற்றிலும் பொலிஸார் வலைவீசி தேடியதால், பாதி வழியிலேயே இறக்கிவிட்டு தப்பியதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தப்பி ஓடிய தாமோதரன் மற்றும் அவருடைய நண்பர்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.