பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொடிகாம இளைஞனே பலி!

கொடிகாமத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயரிழந்த இளைஞனின் சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு வருகை தந்த இளைஞனின் உறவினர் அடையாளம் காட்டியுள்ளார்.

கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த  செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் என்று இளைஞனின் உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தப்பித்த அனைவரும் தென்மராட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்டார் என்றும் ஒரே ஒரு பிள்ளையான இவர் தாயாருடனே  வாழ்ந்து வந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

மானிப்பாய் – இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

இந்தச் சம்பவம் நேற்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது.

ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர்.

அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.