லட்சம் லட்சமாக குவிந்த பணம்: ரஜினி ரசிகன் செய்த திடுக்கிடும் செயல்!

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூடி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கணபதியைச் சேர்ந்த தம்பதி பிரின்ஸ் டேனியல் -கரிஷ்ம. இவர்கள் இருவரும் கெய்டின்ஸ் ஜாப் சொல்யூசன்ஸ் என்ற வேலை வாய்ப்பு மையத்தை நடத்தி வந்துள்ளனர்.

அப்போது அவர்கள், மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகளில் அதிக சம்பளத்தில் வேலை என விளம்பரப்படுத்தியதால், இந்த வேலை வாய்ப்பு மையத்தில் ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

அதன் படி விண்ணப்பித்த ஒவ்வொருவரிடமுமிருந்து 2 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பணத்தை வாங்கிக் கொண்டு, வேலைக்கு அனுப்புவதைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல், காலம் தாழ்த்தி வந்ததால், பணத்தை கொடுத்தவர்கள் அவர்களிடம் கொடுத்த பணத்தை மீண்டும் கேட்டுள்ளனர்.

அவர்கள், வேலை பெற்றுக் கொடுப்பதற்காக முன்பணமாக அவற்றை செலுத்தி விட்டதாகவும் எனவே பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்றும் அவர்களிடம் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றில், தான் நீலகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இளைஞரணி செயலாளர் என்றும், தனக்கு அரசியல் பலம் இருப்பதாக கூறி, பிரின்ஸ் பணம் கொடுத்தவர்களிடம் மிரட்டல் விடுத்துள்ளார்.

இப்படி, 300க்கும் மேற்பட்டவர்களிடம் மொத்தமாக 6 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு பிரின்ஸ் தனது மனைவியுடன் திடீரென்று தலைமறைவாகியுள்ளார்.

இதனால் பணத்தை கொடுத்துவிட்டு ஏமாற்றமடைந்த அவர்கள், காவல் துறையினரிடம் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், பணம் திரும்ப கிடைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரி, இளைஞர்கள் பலர் கோவை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

அதில் ஒரு இளைஞர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தன்னை சுற்றுலா விசாவில் இந்தக் கும்பல் ஏதோ ஒரு நாட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னை ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டதாகவும், அதன் பின் நான் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

இதனால் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரஜினி நிர்வாகி என கூறிய இந்த நபர் கடந்த ஜனவர் மாதம் நன்னடத்தை விதியை மீறியதால், ரஜினி மன்றத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டதாக், ரஜினி ரசிகர் மன்றத்தின் முக்கிய நபர் ஒருவர் கூறியுள்ளார்.