டிரம் உடனான சந்திப்பு.. பயணிகள் விமானத்தில் பறந்த இம்ரான்கான்!

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க பயணிகள் விமானத்தில் பயணித்தார்.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிறகு, பல்வேறு சிக்கன நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார் இம்ரான் கான். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை சந்திக்க உள்ளார். இதற்காக அமெரிக்காவுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

பொதுவாக ஒரு நாட்டின் தலைவர்கள் மற்றொரு நாட்டிற்கு செல்லும்போது, ராணுவ விமானம் அல்லது தனி விமானத்தை தான் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், தற்போது டிரம்பை சந்திக்க பயணிகள் விமானத்தில் இம்ரான் கான் புறப்பட்டுள்ளார்.

கத்தார் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் பறந்த அவர், சிக்கன நடவடிக்கையாக இதனை செய்துள்ளார். டிரம்பை சந்திப்பதுடன், அமெரிக்க எம்.பிக்கள், கார்ப்பரேட் தலைவர்கள், அமெரிக்க வாழ் பாகிஸ்தான் மக்கள் ஆகியோரையும் இம்ரான் கான் இந்த சுற்றுப்பயணத்தில் சந்திக்க உள்ளார்.

அவருடன் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெக்மூத் குரேஷி, தலைமை ராணுவ தளபதி குவாமர் ஜாவீத் பாஜ்வா மற்றும் ஐ.எஸ்.ஐ தலைமை இயக்குனர் ஆகியோரும் பயணம் செய்தனர்.

பாகிஸ்தானின் இரு ராணுவ உயர் அதிகாரிகள், பிரதமருடன் அமெரிக்கா சென்று இருப்பது இதுவே முதல் முறை ஆகும். மேலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இம்ரான் கானும் முதல் முறையாக அமெரிக்காவில் சந்தித்து பேச உள்ளனர்.