உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கிடைத்த முடிவு நியாயமானதல்ல என்று இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் 12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 14ஆம் திகதி முடிந்தது. பரபரப்பாக நடந்த இறுதிப்போட்டியில், பவுண்டரிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது.
ஆனால், போட்டியின் முடிவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. நியூசிலாந்து அணிக்கு ஆதரவாக பல்வேறு வீரர்கள் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், இறுதிப்போட்டி முடிவு குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.
அவர் இதுதொடர்பாக கூறுகையில், ‘இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட முடிவு நியாயமானதல்ல. இந்த போட்டியில் ஒரு தருணம் கூட ஒரு அணிக்கு சாதகமாக இருக்கவில்லை. இரு அணிகளுமே வெற்றி பெறும் நிலையில் விளையாடின.
சமபலத்துடன் விளையாடிய இரு அணிகளும் வெற்றி தகுதியானவர்கள். போட்டி முடிந்ததும் நான் வில்லியம்சனிடம் பேசினேன். அவரும் குழப்பத்தில் தான் இருந்தார். உலக கிரிக்கெட் வரலாற்றில் இதுபோன்றதொரு இறுதிப்போட்டி நடக்கவே இல்லை என்று கூறுவேன்.
மேலும், இது ஒரு சமமான போட்டி இல்லை. எது எப்படி இருந்தாலும் உலக கோப்பையை வென்றதில் எங்களுக்கு மகிழ்ச்சி தான்’ என தெரிவித்துள்ளார்.