சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் ஒழுங்கு செய்திருந்த சந்திப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் அழைப்பு விடுக்கவில்லை என்று, அமைச்சர் மனோ கணேசன் ஒப்புக் கொண்டுள்ளார்.
கன்னியா, நீராவியடி ஆலயங்கள் தொடர்பாகவும், வேறு பல பிரச்சினைகள் குறித்தும் ஆராய, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதுபற்றி அவர் கடந்த புதன்கிழமை ஊடகங்களுக்குத் தெரியப்படுத்தியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவித்திருந்தார்.
வியாழக்கிழமை நடந்த இந்தச் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. அத்துடன் ஒரு சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் இதில் பங்கேற்றனர்.
இதுகுறித்து, அதிருப்தியடைந்த அமைச்சர் மனோ கணேசன், வடக்கு, கிழக்கு உரிமை பிரச்சினைகளில் இனிமேல் தாம் தலையிடப் போவதில்லை என்றும் கூறியிருந்தார்.
அதேவேளை, சிறிலங்கா அதிபருடனான சந்திப்புக்கு, அதிபர் செயலகத்தில் இருந்தோ, அமைச்சர் மனோ கணேசனிடம் இருந்தோ, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை அமைச்சர் மனோ கணேசன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தாம் சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது குறித்து சுமந்திரனுக்கு தெரியப்படுத்தியதாகவும், அவர் அது குறித்து கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அறியப்படுத்துவார் என நினைத்து விட்டதாகவும், கூறியுள்ள மனோ கணேசன், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு தாம் நேரடியாக அழைப்பை விடுக்கவில்லை என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.