இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தமது குடும்பத்திற்காக வெளிநாட்டில் 40 ஆண்டுகள் வேலை பார்த்து திரும்பிய நிலையில், அதே குடும்பத்தினரால் துரத்தி அடிக்கப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் முகமது குஞ்ஞி. இவரையே 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாட்டில் பணியாற்றிவிட்டு திரும்பியபோது சொந்த குடும்பத்தால் அடித்து துரத்தப்பட்டவர்.
முகமதுவுக்கு இரு சகோதரிகள், ஏழ்மையில் கடுமையாக பாதிக்கப்ப இந்த குடும்பத்தை காப்பாற்ற கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஐக்கிய அமீரகம் சென்றுள்ளார் முகமது.
அங்கே இந்தியர்களின் உணவு விடுதிகள், வணிக வளாகங்களில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, தமது சகோதரிகள் இருவரையும், ஒருகட்டத்தில் அவர்களது பிள்ளைகளையும் திருமணம் செய்து தர போதுமான நிதி உதவியையும் முகமது அளித்துள்ளார்.
மட்டுமின்றி, நாட்டில் தமது பெயரில் குடியிருப்பு ஏதும் இல்லாத நிலையிலும், தமது சகோதரிகள் இருவருக்கும் சொந்தமாக இவரது பணத்தில் குடியிருப்புகளை கட்டித் தந்துள்ளார்.
தமது சகோதரிகளுக்காகவும், அவர்களது பிள்ளைகளுக்காகவும் வாழ்ந்த முகமதுவுக்கு திருமணம் முடிந்து பிள்ளைகள் ஏதும் இல்லை.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வயது மூப்பு காரணமாக தமது 40 ஆண்டுகால வெலிநாட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டு முகமது கேரளா திரும்பியுள்ளார்.
ஆனால் இந்த 2 ஆண்டுகளில் முகமதுவுக்கு கசப்பான அனுபவமே தமது சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் இருந்து கிட்டியுள்ளது.
உணவுக்கே கெஞ்சும் நிலை ஏற்பட்டதாக கூறும் முகமது, ஒருகட்டத்தில் தமது சகோதரிகளால் குடியிருப்பில் இருந்து துரத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தமது மனைவி ரெளலாவுடன் மீண்டும் ஐக்கிய அமீரகத்திற்கு விமானம் ஏறியுள்ளார். ஆனால் அவர் விரும்பியது போன்று இந்த இரண்டாம் பயணம் அமையவில்லை.
வயதான முகமதுவுக்கு வேலை வழங்க பலர் மறுத்துள்ளதுடன், சாப்பாட்டுக்கே கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பல நாட்கள் பட்டிணியாலும், நோயாலும் துன்பப்பட்ட முகமது இறுதியில் மனைவியின் மடியிலேயே கண்கள் மூடியுள்ளார். கணவர் இறந்த சில நாட்களில் மனைவி ரெளலாவும் இறந்துள்ளார்.
குடும்பத்திற்காக பாலைவனத்தில் 40 ஆண்டுகள் உழைத்த நபர் இறுதியில், அதே குடும்பத்தாரால் துரத்தியடிக்கப்பட்டு, அனாதையாக மரணமடைந்த சம்பவம் பலரையும் உருக வைத்துள்ளது.