அயர்லாந்து எல்லையில் அமைந்துள்ள கிறிஸ்தவ கல்லறைத் தோட்டம் ஒன்றில் பெரும் கூட்டத்திற்குள் அசுர வேகத்தில் புகுந்த கார் மோதி பலர் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு அயர்லாந்து எல்லையில் அமைந்துள்ள செயின்ட் பேட்ரிக் கல்லறைத் தோட்டத்தில் வருடாந்த வழிபாடு நிகழ்வுகள் நடந்த வேளையிலேயே இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
குறித்த வழிபாடு நிகழ்வில் சுமார் 1,000 பக்தர்கள் கலந்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. உள்ளூர் நேரப்படி மாலை 4 மணியளவில், கருப்பு வண்ண கார் ஒன்று அசுர வேகத்தில் பொதுமக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்துள்ளது.
இதில் பலர் தூக்கி வீசப்பட்டதாகவும், பின்னர் அந்த கார் அங்கிருந்து அதே வேகத்தில் மாயமாகியுள்ளது என சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அங்கிருந்து வெளியேறும் முன்னர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மோதி விபத்து ஏற்படுத்திய காரும் நின்றுள்ளது.
தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், தப்பிக்க முயன்ற அந்த காரின் சாரதியை கைது செய்துள்ளனர்.
20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞரின் பொலிசார் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தின்போது, கார் மோதி பலர் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலர் உயிர் பயத்தில் அலறியபடி சிதறி ஓடியுள்ளனர்.
பலர் அந்த கார் வேகமாக கூட்டத்தை நோக்கி விரைவது கண்டு, சாரதியை சைகையால் எச்சரித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கும் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.