சர்ச்சைக்குரிய பெண் எழுத்தாளருக்கு விசா காலம் நீட்டிப்பு!

சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரீன் விசா காலம் மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரீன். இவர் சுவீடன் குடியுரிமை பெற்றவர்.

பல்வேறு புத்தகங்கள் எழுதி சர்ச்சையில் சிக்கிய இவர், மத அடிப்படைவாதிகளால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் விசா பெற்று இந்தியாவில் தங்கி வருகிறார்.

இந்நிலையில், கடந்த வாரம் தனது விசாவை நீட்டிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அவர் தனது டிவிட்டர் பதிவில், எனது விசா காலத்தை நீட்டித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நான் 5 ஆண்டுகளுக்கு எனது விசாவை நீட்டிக்க கோரி விண்ணப்பித்தேன். ஆனால், அது 3 மாதங்கக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் நான் 5 ஆண்டுகளுக்கு விசா காலத்தை நீட்டிக்க கோரி விண்ணப்பிக்கிறேன்.

ஆனால், ஒரு ஆண்டுக்கு மட்டுமே நீட்டிக்கப்படுகிறது. இந்த முறை 5 ஆண்டுகள் நீட்டிக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தேன்.

ஆனால், 3 மாதங்கள் மட்டுமே விசா காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது எனது விசா காலத்தை நீட்டிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

அவரது வேண்டுகோளை ஏற்று விசா காலத்தை ஒரு ஆண்டுக்கு நீட்டிப்பு செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, எழுத்தாளர் தஸ்லிமா நஸ்‌ரீன் 2020 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் தங்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது.