திருகோணமலை – புல்மோட்டை பகுதியிலுள்ள வீட்டிலிருந்து தங்க ஆபரணங்களை திருடிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேகநபரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 42 வயது உடைய நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புல்மோட்டையிலுள்ள குறித்த வீட்டில் வேலைக்காக வந்த சந்தேகநபர் 92,000 ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களை திருடியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த புல்மோட்டை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்து இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருடிய ஆபரணங்களை வங்கியில் அடகு வைத்துள்ளதாகவும், அதனை பெறுவதற்குரிய நீதிமன்ற கட்டளையை பெறவுள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.