ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நேற்றைய தினத்துடன் சரியாக மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த கொடூரமான தாக்குதல்களுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் காரணமென்றால், அதற்கு பிறகு இலங்கை அரசியலில் காணக்கூடியதாக இருக்கின்ற வெறுப்பூட்டும் போக்குகளுக்கு சிங்கள – பௌத்த அடிப்படைவாதம் காரணமாக இருக்கிறது. கடந்த மூன்று மாதகாலத்தில் அரசியல் விவாதங்களின் திசைமார்க்கத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான காரணிகளில் சிங்கள – பௌத்த மேலாண்மைவாதம் முதல்நிலை வகித்துவருகிறது. அதன் முன்னரங்க சேனைகளாக பிக்குமார் விளங்குகிறார்கள்.
அரசியலில் பிக்குமாரின் ஆதிக்கம் என்பது இலங்கையைப் பொறுத்தவரை அண்மைக்காலத்தில் வளர்ந்த புதியதொரு தோற்றப்பாடல்ல, பல தசாப்தங்களாக இருந்துவருகிற ஒன்றுதான்.ஆனால், அதன் அண்மைக்கால வெளிப்பாடுகள் தென்னிலங்கை அரசியல் சமுதாயத்தில் ஆரோக்கியமான அரசியல் சிந்தனைப்போக்குகளுக்கு எதிர்காலத்தில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் குறித்து பலமான ஐயத்தை கிளப்புகின்றன.
தான்தோன்றித்தனமாக செயற்படுகின்ற பிக்கு ஒருவர் உண்ணாவிரதப்போராட்டம் ஒன்றை ஆரம்பித்து சட்டரீதியாக நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்களின் பேரில் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்த மாகாண ஆளுநர்களையும் அமைச்சர்களையும் பதவிவிலகச் செய்யமுடிகிறது. குறிப்பிட்ட காலஅவகாசத்திற்குள் அந்த பதவிவிலகல்கள் இடம்பெறவில்லையானால் நாடு பூராவும் ‘ களியாட்டம் ‘ நடப்பதை எல்லோரும் பார்ப்பீர்கள் என்று பகிடிவிட்டு குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்படும் என்று தலதா மாளிகைக்கு முன்பாக பொலிசாருக்கு முன்னால் நின்று துணிச்சலுடன்வேறு ஒரு பிக்குவால் கூறக்கூடியதாக இருக்கிறது ; திரிபுபடுத்தப்பட்ட தேசியக்கொடியை ஏந்திய கூட்டத்தினர் மத்தியில் நின்றுகொண்டு இலங்கையில் சிங்களவர்களை மாத்திரம் கொண்ட அரசாங்கம் அமையவேண்டும் என்று அவரால் பிரகடனம் செய்யமுடிகிறது.
எந்த விதமான வன்முறையையும் ஏற்றுக்கொள்ளாத பௌத்த தர்மத்தைப் போதிக்கின்றவர்கள் என்று தங்களைக் கூறிக்கொள்கின்ற இந்த பிக்குமாரின் பேச்சுக்களில் முற்றிலும் வன்முறைத்தொனியே தெறிப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. அரசாங்கத் தலைவர்களையும் அரசியல்வாதிகளையும் எச்சரிக்கை செய்து ” உத்தரவுகளையும் ” கூட அடிக்கடி பிக்குமார் பிறப்பிக்கிறார்கள். அரசியல் தலைவர்களுக்கு முகெலும்பு இருக்கிறதா என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.கண்ணியமாக நடந்துகொள்ளாத பிக்குமாரின் செயற்பாடுகளைக்கூட கண்டிப்பதற்கு அரசியல்வாதிகள் முன்வருவதில்லை. விதிவிலக்காக துணிச்சலை வரவழைத்துக்கொண்டு எந்த அரசியல்வாதியும் பிக்குமாரின் தவறுகள் என்று எதையாவது குறிப்பிட்டுவிட்டால் மன்னிப்புக்கேட்கும் வரை அவரை ஓய்வாக இருக்கவிடமாட்டார்கள்.பிக்குமாரில் குறிப்பிட்ட சில பிரிவினரின் தவறான போக்குகளைச் சுட்டிக்காட்டினால், அதை முழு மகாசங்கத்தையும் அவமதிக்கும் செயலாக அர்த்தப்படுத்தும் விபரீதப்போக்கு ஒன்றையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.
பிக்குமாரில் எந்தப்பிரிவினரையும் எந்தக் காரணத்துக்காகவும் தங்களது கட்சியைச் சேர்ந்தவர்கள் புண்படுத்திவிடக்கூடாது என்பதில் அரசியல் தலைவர்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். வன்முறையைத் தூண்டுகின்ற பிக்குமாரின் பிரசாரங்களையும் செயற்பாடுகளையும் பௌத்த உயர்பீடங்களும் கண்டிப்பதில்லை.
இத்தகைய பிக்குமாரின் போக்குகளை விரும்பாத பிரிவினர் பெரும்பான்மைச் சமூகத்தவர்கள் மத்தியில் கணிசமானளவில் இருக்கவே செய்கிறார்கள்.ஆனால், அவர்கள் பகிரங்கமாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த முன்வரமுடியாத அளவுக்கு பேரினவாதம் மலைபோல் உயர்ந்துநிற்கிறது. கெடுதி செய்பவர்களினால் அல்ல அந்த கெடுதிகளுக்கு எதிராக எதையும் செய்யவோ பேசவோ முன்வராதவர்களினாலேயே உலகம் மக்கள் வாழ்வதற்கு ஆபத்தான இடமாக இருக்கிறது என்ற ஒரு மேதையின் கூற்று இங்கு நினைவுக்கு வருகிறது.
இலங்கையில் காவியுடை பௌத்தர்களினால் எப்போது போற்றிமதிக்கப்படுகிறது. ஆனால்,கிறிமினல் செயல்களில் ஈடுபடுகின்ற பேர்வழிகள் அந்த காவியுடைக்குள் தங்களை மறைத்துக்கொள்வதையும் எவரும் மறுக்கமுடியாது.ஒரு பௌத்தபிக்குவே தனது காவியுடைக்குள் கைத்துப்பாக்கியை மறைத்துவைத்துக்கொண்டுவந்து பிரதமர் ஒருவரைச் சுட்டுக்கொன்றார் என்பது வரலாறு.
சொல்லப்போனால், இலங்கையில் பௌத்தமதம் ஒரு அரசியல் மதமாகவே விளங்குகிறது. அரசியலில் தங்களுக்கு செல்வாக்கான அந்தஸ்து ஒன்று வேண்டும் என்று பிக்குமார் நாட்டம் கொள்வதே இலங்கையில் உள்ள பிரச்சினை. புராதன காலத்தில் பௌத்தபிக்குமார் மன்னர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள் என்பதை சுட்டிக்காட்டிக்கொண்டுதான் இன்றைய யுகத்திலும் அவர்கள் அரசாங்கங்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் ஆலோசனை கூற வலிந்து முன்வருகிறார்கள். அதுபோக, அவர்கள் நேரடியாகவே அரசியலுக்கு வந்தும் விட்டார்கள். காவியுடையுடன் தேர்தல்களில் போட்டியிடுவதன் மூலம் அவர்கள் கட்சி அரசியலுக்குள் பௌத்தமதத்தைக் ெகாண்டுவந்து நீண்டகாலமாகிவிட்டது.
பிக்குமார் நேரடி அரசியலில் ஈடுபடுவதென்பது புத்தரின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணானது என்ற போதிலும், அவர்கள் அரசியலில் இறங்குவதைத் தடுக்க மகாநாயக்கர்களினால் கூட முடியவில்லை.
அரசியலுக்கும் மதத்துக்கும் இடையிலான ‘ திருமணம் ‘ சொர்க்கத்தில் அல்ல, நரகத்திலேயே தீர்மானிக்கப்பட்டது என்று அண்மையில் அரசியல் ஆய்வாளர் ஒருவர் எழுதியிருந்தார்.நவீன இலங்கையில் இந்த ‘ நரகத் திருமணத்தை ‘ ஏற்பாடு செய்து நடத்திவைத்தவர் தனது செயலினால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஏற்படக்கூடிய மாபாதக விளைவுகளை தெளிவாகத் தெரிந்துகொண்டிருக்கக்கூடிய அறிவும் புலமையும் நிறைந்த ஒரு மனிதரே.அவர் ஒன்றும் வீரவன்சவையோ ஞானசாரவையோ போன்றவரல்ல. மொழியறிவு மட்டுப்பாடு காரணமாக உலக வரலாற்றை தெரிந்துகொள்ளமுடியாதவரும் அல்ல. பிரபலமானவராக வரவேண்டும் என்பதற்காக மததை அரசியலுக்கு பயன்படுத்தவேண்டிய அவசியத்தைக் கொண்ட அநாமதேயமும் அல்ல.இருந்தாலும் அவர் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமராகவேண்டும் என்பதற்காக சிங்கள — பௌத்தம் என்ற ஆயுதத்தை வேண்டுமென்றே கையில் எடுத்தார்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் எழுச்சியும் வீழ்ச்சியும் அரசியலில் மதத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான எச்சரிக்கையாக அமைகின்ற ஒரு ‘ நீதிக்கதை’ போன்றதாகும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தக் கதையை தென்னிலங்கையின் எந்த அரசியல் தலைவரும் விரும்பிப் படிக்கவில்லை. அவரைப் போன்றே பிறகு வந்த அரசியல் தலைவர்களும் பிக்குமாரை தங்களது அரசியலுக்கு தாராளமாகப் பயன்படுத்தினார்கள். இன்று இறுதியாக ” அரசியல்வாதிகளே, நீங்கள்பேசாமல் இருங்கள் நாங்கள் ஆட்சிசெய்கிறோம் ” என்று பிக்குமார் பிரகடனம் செய்கின்ற நிலை வந்துவிட்டது.
சில மாதங்களில் முக்கியமான தேர்தல்கள் வரவிருக்கின்றன. தங்களது எதிர்கால வாய்ப்புக்களுக்காக மேலும் கூடுதலான அளவுக்கு அரசியல்வாதிகள் பிக்குமாரையும் மதத்தையும் பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுவார்கள். தனக்கு இரண்டாவது பதவிக்காலத்தை பெற்றுக்கொள்ளும் பிரயத்தனத்தில் மதத்தைப் பயன்படுத்தும் எண்ணத்துடனேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றவாளியாகக் காணப்பட்டு சிறைவாசம் அனுபவித்த பொதுபல சேனாவின் ஞானசார தேரோவுக்கு மன்னிப்பு அளித்து விடுதலை செய்தார்.
அத்துரலிய தேரோவின் மிரட்டலுக்கு பணிந்தது உட்பட பல காரியங்கள் மூலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எந்தவிதமான தீவிரவாத்துக்கும் எதிராக துணிந்துநிற்கும் உத்தேசம் தனக்கு இல்லை என்பதை வெளிக்காட்டியிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பல சைத்தியாக்களை நிர்மாணிக்கப்போவதாக சஜித் பிரேமதாச அளித்திருக்கும் உறுதிமொழி ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராவதற்கான தனது முயற்சிகளில் மதம் முக்கியமான பாத்திரத்தை வகிக்கப்போகிறது என்பதற்கான சமிக்ஞையைக் காட்டியிருக்கிறார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக வருபவர் தன்னை ஒரு நவீன துட்டகைமுனுவாக – சிங்கள பௌத்தத்தின் பாதுகாவலனாக முன்னிறுத்துவார் என்பதில் சந்தேகமில்லை. எதிர்வரும் மாதங்களில் அரசியலில் மதம் என்ற ஆயுதம் மிகவும் ஆபத்தானமுறையில் பயன்படுத்தப்படப்போகிறது. நரகத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தின் விளைவு !