கோஹ்லியிடம் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன்! க்ருணால் பாண்ட்யா

இந்திய கிரிக்கெட் அணி வீரர் க்ருணால் பாண்ட்யா, அணித்தலைவர் விராட் கோஹ்லியிடம் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, க்ருணால் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நவ்தீப் சைனி, கலீல் அகமது, ராகுல் சாஹர், வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர் போன்ற இளம் வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அணித்தலைவராக விராட் கோஹ்லி செயல்பட உள்ள நிலையில், அவரிடம் நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள விரும்புவதாக க்ருணால் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறேன். விராட் கோஹ்லியிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொள்ள விரும்புகிறேன்.

அவரிடம் இருக்கும் அந்த வெறி மற்றும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை கற்க விரும்புகிறேன். இந்திய ‘ஏ’ அணியில் விளையாடியது நிறைய அனுபவங்களை கற்றுக் கொடுத்துள்ளது.

கடந்த 2 மற்றும் 3 ஆண்டுகளில் இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் விளையாடினேன். அப்போது மூத்த வீரர்களிடம் இருந்து நிறைய விடயங்களை கற்றுக்கொண்டேன். டோனியைப் போன்ற சிறந்த ஃபினிஷர் உலக கிரிக்கெட்டில் தற்போது யாரும் இல்லை.

சூழ்நிலைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு தன்னைத் தயார் செய்துகொண்டு விளையாடும் திறன் டோனியிடம் உள்ளது. அதைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது மும்பை அணிக்கு நான் விளையாடியது தான். அங்கு தான் எனது திறமையை வெளிப்படுத்த முடிந்தது’ என தெரிவித்துள்ளார்.