தமிழகத்தில் பேஸ்புக் காதலனை நம்பி அவருடன் தனியாக வீடு எடுத்து தங்கி குடித்தனம் நடத்தி வந்த மருத்துவ கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரது மகள் இந்துமதி (20). இவர், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு பேஸ்புக் மூலம் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஷ்குமாருடன் (25) நட்பு கிடைத்தது.
சதீஷ்குமார் தன்னை ஒரு பொறியாளர் என இந்துமதியிடம் கூறினார்.
இந்நிலையில் இருவரின் நட்பானது நாளடைவில் காதலாக மாறியது. வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும், கடந்த 2 ஆண்டுகளாக பேஸ்புக்கில் பேசி வந்ததுடன் அடிக்கடி நேரிலும் சந்தித்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் வீட்டுக்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டனர். ஒரத்தநாட்டில் விடுதியில் தங்கியிருப்பதாக கூறி விட்டு இந்துமதி, கணவருடன் தனியாக ஒரத்தநாடு எழுத்துக்கார தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து ரகசியமாக குடும்பம் நடத்தி வந்ததுடன் கல்லூரிக்கும் சென்று வந்துள்ளார்.
பின்னர் தான் சதீஷ்குமார் பொறியாளர் இல்லை, எலக்ட்ரீசியன் என இந்துமதிக்கு தெரியவந்தது. இதோடு அவர் குடிக்கு அடிமையானவர் என்றும் தெரியவந்தது.
இதனிடையில் இந்துமதி பெற்றோருக்கு, மகள் ரகசிய திருமணம் செய்து கணவருடன் தனியாக வாழ்வது தெரியாது.
விடுதியில் தங்கி கல்லூரியில் படிப்பது போன்றே அவ்வப்போது ஊருக்கு சென்று வந்துள்ளார் இந்துமதி.
இந்நிலையில் நேற்று காலை இந்துமதி வீட்டில் நடமாட்டம் இல்லாததால் அருகில் உள்ளவர்கள் அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டுக்குள் இந்துமதி தூக்கில் மர்மமான முறையில் சடலமாக தொங்கினார். அருகே நிதானமின்றி மதுபோதையில் சதீஷ்குமார் கிடந்தார். தகவல் அறிந்து பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று இந்துமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் மகள் ரகசிய திருமணம் செய்து பலியானது தெரிந்து பதறி துடித்தனர்.
இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் இந்துமதியை அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா என்று சதீஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.