சோதனைகளை சாதனையாக்கி வரலாறு படைத்த ஈழத் தமிழ் பெண்!

உலகக் கோப்பை வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்கள் அடித்து ஈழத் தமிழ் பெண் தர்ஜினி சிவலிங்கம் சாதனை புரிந்துள்ளார்.

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி இங்கிலாந்து லிவர்பூலில் நடைபெற்ற உலகக் கோப்பை வலைப்பந்தாட்ட தொடரில் பங்கு பெற்று யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

வலைப்பந்தாட்டத் தொடர் ஒன்றில் 348 கோல்களை போட்டு, தர்ஜினி சிவலிங்கம் இந்த சாதனையை படைத்துள்ளார்.

375 முயற்சிகளில், 348 கோல்களை தர்ஜினி சிவலிங்கம் போட்டுள்ளார்.

ஜமைக்காவை சேர்ந்த ஜானியேல் ஃபோலர் 304 கோல்களை வலைப்பந்தாட்ட தொடர் ஒன்றில் போட்டு முன்னிலை வகித்த சாதனையை தர்ஜினி சிவலிங்கம் முறியடித்துள்ளார்.

யார் இந்த தர்ஜினி சிவலிங்கம்?

யாழ்ப்பாணம் – ஈவினை – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் சிவலிங்கம் தம்பதியினருக்கு தர்ஜினி 1979ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30ஆம் திகதி பிறந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – வயாவிலான் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற தர்ஜினி சிவலிங்கம், அப்போது நாட்டில் நிலவி அமைதியற்ற சூழ்நிலை காரணமாக, குறித்த பாடசாலை 13 இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் தர்ஜினி சிவலிங்கத்தின் கல்வி பொதுதராதர சாதாரண தரத்திற்கு பின்னர் சிறிது காலம் தடைப்பட்டிருந்தது.

எனினும், சில காலங்களின் பின்னர் அவர் தனது உயர்தர கல்வியை தொடர்ந்து, தேர்வில் சித்தி பெற்றதன் ஊடாக கிழக்கு பல்கலைக்கழக பிரவேசத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தர்ஜினி சிவலிங்கம் பொருளாதார பட்டப்படிப்பை நிறைவு செய்தமை விசேட அம்சமாகும்.

வலைப்பந்தாட்ட போட்டிகளில் விளையாடும் வீரர்கள் தமது விளையாட்டை பாடசாலை நாட்களிலேயே ஆரம்பிப்பது அனைவரும் அறிந்த நிலையில், தர்ஜினி சிவலிங்கம் தனது 23ஆவது வயதிலேயே வலைப்பந்தாட்ட விளையாட்டுக்கான பிரவேசத்தை பெற்றுள்ளார்.

தர்ஜினி சிவலிங்கத்தின் உயரம் 6 அடி 10 அங்குலம். அது வலைப்பந்தாட்ட போட்டிகளில் அவரை மேலோங்கி செல்ல உதவியது.

தர்ஜினி சிவலிங்கம் வலைப்பந்தாட்ட அணிக்குள் பிரவேசித்த விதம்

2004ஆம் ஆண்டு வவுனியாவில் நடைபெற்ற வலைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி தர்ஜினி சிவலிங்கம் விளையாடியுள்ளார்.

அன்றைய தினம் தர்ஜினியின் திறமைகளை நேரில் கண்ட அனைவரும், அவரின் திறமையை கண்டு வியப்படைந்துள்ளனர்.

அன்றைய போட்டிக்கு சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாரியாரான ஷிரந்தி ராஜபக்ச, தர்ஜினி சிவலிங்கத்தை தேசிய அணியில் இணையுமாறு வலியுறுத்தியுள்ளார்.

எனினும், மொழி பிரச்சினை காரணமாக சற்று தயக்கம் காட்டிய தர்ஜினி, சில மாதங்களின் பின்னர் தனியார் வங்கியொன்றில் பணிப்புரிய ஆரம்பித்துள்ளார்.

இந்த நிலையிலேயே தர்ஜினி சிவலிங்கம், இலங்கை தேசிய அணிக்குள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, சிங்கப்பூரில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற வலைப்பந்தாட்ட உலகக் கோப்பைத் தொடரில் இலங்கை அணி சரியாக பிரகாசிக்காத போதிலும், தர்ஜினி சிவலிங்கம் மாத்திரம் தொடரில் 290 கோல்களை போட்டு உலக வலைப்பந்தாட்ட ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்ட நிர்வாகத்தில் ஏற்பட்ட சில சர்ச்சைகள் காரணமாக தர்ஜினி சிவலிங்கம், 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

அதன் பின்னரான காலப் பகுதியில் தான் பணியாற்றிய வங்கி அணியை பிரதிநிதித்துவப்படுத்திய தர்ஜினி சிவலிங்கம், 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற விக்டோரியா லீக் போட்டிகளில் தொழில்சார் வலைப்பந்தாட்ட வீராங்கனையாக இணைந்துக் கொண்டுள்ளார்.

இலங்கை தேசிய அணியில் புறக்கணிக்கப்பட்ட தர்ஜினி சிவலிங்கம், தொழில்சார் வலைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாட ஆரம்பித்தார்.

தொழில்சார் வலைப்பந்தாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய முதலாவது இலங்கையர் என்ற பெருமை தர்ஜினி சிவலிங்கத்திற்கு இந்த போட்டிகளின் ஊடாக கிடைத்தது.

தேசிய அணியில் புறக்கணிக்கப்பட்ட தர்ஜினி சிவலிங்கம், ஆஸ்திரேலியாவில் மிக சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

இதன்பின்னர் தர்ஜினி சிவலிங்கம் இலங்கை தேசிய அணிக்குள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்னர் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்தாட்ட போட்டிகளில் இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை பெற தர்ஜினி சிவலிங்கம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.