பூட்டியிருந்த பல்பொருள் அங்காடியை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் மாயமான இளைஞர் ஒருவர், பல்பொருள் அங்காடி ஒன்றின் குளிர் பதன அறையில் சிக்கி மரணமடைந்த சம்பவம் 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அயோவா மாகாணத்தில் உள்ள கவுன்சில் பிளஃப்ஸ் பகுதியில் பெற்றோருடன் குடியிருந்து வந்த முரில்லோ மோன்கடா என்ற இளைஞர் திடீரென்று கடந்த 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாயமானார்.

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞருக்கு சம்பவத்தன்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தம்மை யாரோ தொடர்வதாகவும், அழைப்பதாகவும் கூறி வந்த இளைஞர் மாலை 6.15 மணியளவில் குடியிருப்பை விட்டு வெளியேறியுள்ளார்.

ஆனால் அவர் அதன் பின்னர் திரும்பி வரவே இல்லை. பெற்றோரும் பொலிஸ் குழுவும் அப்பகுதி முழுவதும் தேடியும் அந்த இளைஞர் தொடர்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

குறித்த இளைஞர் பணியாற்றி வந்த பல்பொருள் அங்காடியானது கடந்த 2016 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் திங்களன்று அந்த பல்பொருள் அங்காடியில் உள்ள குளிரூட்டும் அறை மற்றும் எஞ்சிய பொருட்களை அப்புறப்படுத்த ஒப்பந்ததாரர்கள் முயன்றுள்ளனர்.

அப்போதே குளிரூட்டும் அறையின் இடைவெளியில் மிகவும் மோசமான நிலையில் ஒரு சடலம் சிக்கியிருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து நடந்த விசாரணையில் அந்த சடலம் கடந்த 2009 ஆம் ஆண்டு மாயமான முரில்லோ மோன்கடா என்ற இளைஞரின் என்பது தெரியவந்துள்ளது.

அயோவா பொலிசார் டி.என்.ஏ சோதனையிலும் இந்த வழக்கை உறுதி செய்துள்ளனர்.