ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத் துறைக்கு சொன்னது யார் என்பது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2011-ஆம் ஆண்டு மே மாதம் 2-ஆம் திகதி அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க உளவுத் துறை சிறப்பு நடவடிக்கையால் கொன்றது.
இந்த நிலையில் அபோதாபாத்தில் பின்லேடன் மறைவிடத்தை அமெரிக்காவிற்கு கூறியது யார்? என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.
எனினும் பாகிஸ்தானோ ஒசாமா பின்லேடன் இருப்பிடம் குறித்து எங்களுக்கு எதுவுமே தெரியாது என கூறிவந்தது.
இந்த நிலையில் ஒசாமா பின்லேடன் இருப்பிடத்தை அமெரிக்க உளவுத் துறைக்கு சொன்னது யார் என்பது குறித்து இம்ரான் கான் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரதமராகியதும் அமெரிக்காவுக்கு முதல் முறையாக இம்ரான் கான் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அப்போது தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த இம்ரான் கான், பாகிஸ்தானின் உளவு அமைப்புதான் ஒசாமா பின்லேடன் குறித்த தகவலை அமெரிக்காவுக்கு அளித்தது.
சிஐஏவிடம் கேட்டீர்களென்றால் அவர் இருந்த இடத்தை தொலைபேசி இணைப்பு மூலம் தகவல் அளித்தது ஐ.எஸ்.ஐ. அமைப்புதான் என்பதை கூறுவார்கள்.
மட்டுமின்றி பின்லேடன் மற்றும் அவரது படையினர் சுமார் 3,000 அமெரிக்கர்களை கொன்றுள்ளனர். மேலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இதுவரை சுமார் 70,000 பாகிஸ்தானியர்களை எங்கள் நாடு இழந்துள்ளது எனவும் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.