பிரித்தானியாவிலிருந்த கொள்கலன்களில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிப்பொருட்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சர் மங்கள சமரவீர இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், வெளிநாட்டிலிருந்து கொள்கலன்களில் அடைத்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பெருமளவு கழிவுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், அதன் முடிவில் இக்கழிவுகளை மீண்டும் அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளோதாக கொழும்பிலுள்ள சுங்கத்திணைக்களத்தின் தலைமைக் காரியாலயத்தில் கடந்த திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் சுங்கப்பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்திருந்தார்.
சர்வதேச வர்த்தகம் தொடர்பில் வழங்கப்படும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி உபயோகப்படுத்தப்பட்ட மெத்தை மற்றும் வேறு கழிவுகள் அடங்கிய 241 கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.அவற்றில் 130 கொள்கலன்கள் இந்த இறக்குமதியுடன் தொடர்புடைய தரப்பினால் பொறுப்பேற்கப்பட்டு விட்டன. எஞ்சிய 111 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
சுங்கப்பிரிவினால் இவ்விடயம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், அது குறித்த முழு விபரங்களையும் தற்போது வெளியிட முடியாத சூழ்நிலை உள்ளது, வெளிநாடுகளிலிருந்து இறக்கு மதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களும் சுங்கப்பிரிவினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை.
அந்த வகையில் இலங்கை முதலீட்டுச் சபையுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, சுதந்திர வர்த்தக வாய்ப்புக்களைப் பெற்றிருக்கும் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றினால் 130 கழிவு கொள்கலன்கள் பொறுப்பேற்கப்பட்டு விட்டன. இதனுடன் மேலும் இரு பிரபல தனியார் நிறுவனங்கள் தொடர்புபட்டுள்ளன.
அந்த வகையில் தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவுகள் குறித்து மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டனவா என்பது எமக்குத் தெரியாது. எனினும் நாம் இவ்விடயம் தொடர்பில் கடந்த மே மாதம் 7 ஆம் திகதி விசாரணைகளை ஆரம்பித்தோம்.
உலகளவில் மருத்துவக் கழிவுகள், இலத்திரனியல் கழிவுகள், அணுக் கழிவுகள் உள்ளிட்ட பெருமளவான கழிவுகள் வெளியேற்றப்படுகின்றன. இவை பல மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதன் பின்னணியில் உள்ள ஆபத்து இன்னமும் புரிந்துகொள்ளப்படவில்லை. ஆனால் அனைத்து அரசாங்கங்களிடமும் நாங்கள் இதுபற்றி எடுத்துக்கூறி வந்திருக்கிறோம்.
இந்நிலையில் இதுகுறித்த விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றோம். அதன் முடிவில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கழிவுகளை மீள் ஏற்றுமதி செய்வதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வதற்குத் தீர்மானித்திருக்கிறோம் என சுங்கப்பிரிவின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலேயே நிதியமைச்சர் மங்கள சமரவீர குறித்த குப்பைகள் அடங்கிய கொள்கலன் மீது விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு உத்தரவு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.