இங்கிலாந்தின் மான்செஸ்டர் விமானநிலையத்தில் தான் விமானநிலைய அதிகாரிகளால் அவமானப்படுத்தப்பட்டதாக பாக்கிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் வசிம் அக்ரம் குற்றம்சாட்டியுள்ளார்.
டுவிட்டரில் இது குறித்து அக்ரம் பதிவு செய்துள்ளார்.
மான்செஸ்டர் விமானநிலையத்தில் அதிகாரிகள் என்னிடம் மிகவும் மூர்க்கத்தனமான விதத்தில் கேள்வி எழுப்பினர் என அவர் தெரிவித்துள்ளார்.
என்னிடமிருந்த இன்சுலினை வெளியே எடுத்து அவர்கள் வழங்கிய பிளாஸ்டிக் பையினுள் வீசுமாறு கேட்டனர் என அக்ரம் தெரிவித்துள்ளார்.
மான்செஸ்டர் விமானநிலையத்தில் இன்று நான் மனமுடைந்துபோயுள்ளேன் எனவும் அக்ரம் டுவி;ட்டரில் பதிவு செய்துள்ளார்.
நான் உலகம் முழுவதும் எனது இன்சுலினுடனேயே பயணம் செய்கிறேன் ஆனால் ஒருபோதும் இவ்வளவு அவமானப்பட்டதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நான் மிகவும் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன் என்னிடம் கடுமையான கேள்விகளை கேட்டனர் எனவும் அக்ரம் தெரிவித்துள்ளார்.
வசிம் அக்ரத்தின் டுவிட்டர் பதிவிற்கு உடனடியாக பதிலளித்துள்ள மான்செஸ்டர் விமான நிலைய அதிகாரிகள் இந்த விடயத்தை எங்களின் கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றி எங்களிற்கு நீங்கள் நேரடியாக செய்தியை அனுப்பினால் நாங்கள் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வோம் என தெரிவித்துள்ளனர்.
மான்செஸ்டர் விமானநிலைய அதிகாரிகளின் இந்த பதிவை வரவேற்பதாக அக்ரம் தெரிவித்துள்ளார்.
எனக்கு விசேட சலுகைகள் எதனையும் நான் எதிர்பார்க்கவில்லை,அதிகாரிகள் அனைத்து பயணிகளுடனும் அக்கறையுடன் நடந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என அக்ரம் தெரிவித்துள்ளார்.