23 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பரதன்! யாசகராக திரியும் அவலம்…

23 ஆண்டுகளுக்குமுன் மீன்பிடிக்க சென்று காணாமல் போன ஒருவர் தற்போது இலங்கையில் யாசகம் பெற்றும் வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இராமேசுவரம் சல்லிமலை பகுதியை சேர்ந்தவர் பரதன் (வயது62). கடந்த 1996ம் ஆண்டு கடலுக்கு 3 மீனவர்களுடன் மீன்பிடிக்க சென்றபோது கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானதில் பரதன் இறந்துவிட்டதாக கருதப்பட்டது.

அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் குடும்பத்தினர் உயிரிழந்துவிட்டதாக கருதி அவர் தொலைந்து போன நாளை நினைவு நாளாக கருதி வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குமுன் சமூக வலைதளம் ஒன்றில் பிச்சைக்காரர்கள் பற்றி வெளியான வீடியோ காட்சியில் பரதன் இலங்கையில் பிச்சைக்காரராக திரிவது போன்ற காட்சியை பரதனின் குடும்பத்தினர் பார்த்து அவர்தான் என்று உறுதிசெய்தனர்.

இந்த நிலையில் மீனவர் பரதன் கொழும்பு பகுதியில் உள்ள வைத்தியசாலையில் மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக குடும்பத்தினர் அறிந்துகொண்டனர்.

இந்நிலையில், பரதனை மீட்க கோரி அவரது குடும்பத்தினர் மனு கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை கூடுதல் இயக்குனர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளதாவது,

“கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்னர் மீன்பிடிக்க சென்று கடலில் சிக்கி தற்போது இலங்கையில் உள்ளதாக கூறப்படும் மீனவர் பரதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

23 ஆண்டுகளுக்குமுன் நடந்த சம்பவம் என்பதால் இதுதொடர்பாக மீன்வளத்துறை சார்பில் மத்திய அரசின் மறுவாழ்வுத்துறை மூலம் இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவித்து பரதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் நிலையை கருத்தில் கொண்டு இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விரிவான அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக” கூறியுள்ளார்.