உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததிலிருந்து முன்னாள் கேப்டன் தோனி அவர்களின் பேட்டிங் குறித்து விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். குறிப்பாக அவரது ஓய்வு குறித்து பலரும் கருத்து கூறி வருகின்றனர். ஆனால் தோனியிடம் இருந்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. கிரிக்கெட்டின் முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான முனாஃப் படேல் தோனிக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது தோனி தனக்கென ஒரு தனி பாணியை வைத்திருப்பார் அது பற்றி பிசிசிஐ யிடம் நிச்சயம் தெரிவித்திருப்பார் அவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை யாரும் ஆலோசனை கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் 1975ஆம் ஆண்டு முதல் வெஸ்ட் இண்டீஸ் அணி செய்த சாதனைகளை தோனி 2007 முதல் 2015 வரை உள்ள ஆண்டுகளிலேயே செய்து முடித்துவிட்டார். இந்தியாவிற்கு என அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்தவர் தோனிதான். எனவே இவர் மாதிரியான ஒரு சிறந்த வீரரை இந்திய அணியிலிருந்து அவ்வளவு எளிதாக வெளியேற்ற முடியாது என்று முனாஃப் படேல் கூறியுள்ளார்.