நிலவில் முதன்முதலில் காலடி எடுத்துவைத்த வரலாற்று பெருமைக்குரியவரான நீல் ஆம்ஸ்ட்றோங் மருத்துவமனையொன்றின் பிழையான மருத்துவசிகிச்சை காரணமாகவே உயிரிழந்தார் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி தெரிவித்துள்ளது.
நீல் ஆம்ஸ்ட்றோங்கின் மரணம் குறித்து எழக்கூடிய சர்ச்சையை தவிர்ப்பதற்காக மருத்துவமனை ஆம்ஸ்டிரோங்கின் குடும்பத்தவர்களிற்கு ஆறு மில்லியன் டொலர்களை வழங்கியது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஆம்ஸ்ட்றோங்கின் இரு மகன்களும் சகோதரியும் சகோதரரும் பேரப்பிள்ளைகளும் அந்த பணத்தை பெற்றுக்கொண்டு உண்மைகளை மறைத்தனர் எனவும் நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் நீல் ஆம்ஸ்ட்றோங்கின் மனைவி கரோல் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நீல் ஆம்ஸ்ட்றோங் 2012 இல் மரணமானார்.
அவ்வேளை அவர் இருதயசத்திரகிசிச்சையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளினால் மரணமடைந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
எனினும் அவர் மருத்துவகிசிச்சையில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக மரணமடைந்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
மேர்சிஹெல்த் பெயர்பீல்ட் மருத்துவமனையில் சத்திரகிசிச்சைக்கு பின்னரான சிகிச்சைகளில் காணப்பட்ட திறமையின்மையே தங்களது தந்தையின் மரணத்திற்கு காரணம் என ஆம்ஸ்ட்றோங் கின் மகன்கள் கருதினர் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.மேலும்; ஆம்ஸ்ட்றோங்கின் குடு;ம்பத்தவர்கள் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.
எனினும் குறிப்பிட்ட மருத்துவமனை தான் வழங்கிய சிகிச்சை சரியானது என முதலில் வாதாடிய போதிலும் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக நஸ்டஈட்டினை வழங்க முன்வந்தது எனவும் நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
நீல் ஆம்ஸ்ட்றோங்கிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் அதனை தொடர்ந்து உருவான சட்டசிக்கல் ஆகியவை குறித்த விபரங்கள் அடங்கிய 90 பக்க ஆவணம் தனக்கு கிடைத்துள்ளதாக நியுயோர்க்டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இரு தரப்பு மருத்துவர்களின் அறிக்கைகள் சட்டநிபுணர்களின் கடிதங்கள் உட்பட முக்கிய விடயங்கள் அடங்கியதாக அந்த ஆவணம் காணப்படுகின்றது எனவும் நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட ஆவணங்களில் காணப்படும் மூன்று மருத்துவஅறிக்கைகள் இருதய பாதிப்பினால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஆம்ஸ்டிரோங்கிற்கு என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்துகின்றன என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ஆரம்பகட்ட மருத்துவபரிசோதனைகளை மேற்கொண்ட மருத்துவர்கள் நீல் ஆம்ஸ்ட்றோங்கிற்கு உடனடியாக பைபாஸ் சத்திரசிகிச்சையை செய்ய தீர்மானித்துள்ளனர்.அவரின் இதயதுடிப்பை சீராக்குவதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆம்ஸ்ட்றோங்கின் இருதயத்தில் தற்காலிக வயர்களை பொருத்தியுள்ளனர்.
எனினும் அந்த வயர்கள் அகற்றப்பட்டவேளை ஆம்ஸ்டிரோங்கின் உடலிற்குள் குருதிகசிவு ஏற்பட்டுள்ளது,இதன் காரணமாக அவர் குறைந்த இரத்த அழுத்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளார் இதன் காரணமாக அவரிற்கு மேலும் சிகிச்சைகளை வழங்கவேண்டிய நிலையேற்பட்டுள்ளது.
அவரை மீண்டும் சத்திரசிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர் . எனினும் அதன் பின்னர் என்ன நடைபெற்றது என்பது தெரியவரவில்லை என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இதற்கு சில நாட்களின் பின்னர் அவர் 2012 ஆகஸ்ட் 25 ம் திகதி மரணமானார்.
நீல்; ஆம்ஸ்ட்றோங் நிலவில் காலடி எடுத்து வைத்து ஐம்பது வருடங்களாகியுள்ளதை உலகம் கொண்டாடி வரும் தருணத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.