வழமைக்கு மாறான ஆட்டமிழப்பு சூழ்நிலையை காண்பிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இரசிகர்களின் கருத்தை கோரியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள வீடியோவில் பந்து ஸ்டம்பில் பட்ட பின்னர் பெயில்ஸ் மேலெழும்பிய பின்னர் மீண்டும் வந்து விக்கெட்டில் சரியாக அமர்கின்றது.
நடுவர் குறிப்பிட்ட துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழக்கவில்லை என அறிவிக்கின்றனர்.
இந்த வீடியோவை பகிர்ந்துகொண்டுள்ள சச்சின் டெண்டுல்கர் தனது இரசிகர்களின் கருத்தை கோரியுள்ளார்.
நண்பர் ஒருவர் இந்த வீடியோவை எனக்கு அனுப்பியிருந்தார் இது முற்றிலும் வழமைக்கு மாறானதாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் நீங்கள் நடுவராகயிருந்தால் என்ன தீர்ப்பை வழங்குவீர்கள் என கேள்வி கேட்டுள்ளார்.
குறிப்பிட்ட பந்தை வீசிய பந்துவீச்சாளர்களிற்கு அனுதாபம் தெரிவித்துள்ள இரசிகர்கள் சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
துடுப்பாட்டர் வீரர் பெயிலில் விடுதலையானார் என இரசிகர் ஒருவர் கருத்து பதிவுசெய்துள்ளார்.
பெயில்ஸ் விக்கெட்டிலிருந்து வெளியே பறந்ததால் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்துள்ளார் என நடுவர்கள் அறிவிக்கவேண்டும் எனவும் இரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
வீரர் ஆட்டமிழந்துவிட்டார் ஆனால் விதிமுறைகளின் அடிப்படையில் அவர் ஆட்டமிழக்கவில்லை என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சிலர் இலங்கை நடுவர் குமார் தர்மசேனவை தங்கள் பதிவுகளிற்குள் இழுத்து அவரை கேலி செய்துள்ளனர்.
குமார்தர்மசேனவிற்கு இவ்வாறான சூழ்நிலையை எப்படி கையாளவேண்டும் என்பது தெரிந்திருக்கும் என இரசிகர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
தர்மசேன இந்த சூழ்நிலையில் நடுவராகயிருந்தால் நிச்சயம் துடுப்பாட்ட வீரர் ஆட்டமிழந்துவிட்டார் என தீர்ப்பை வழங்கியிருப்பார் என இரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.