காரில் செல்லும்போது காதலனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, வேகமாக ஓடும் காரிலிருந்து இறங்கிய காதலி, வரிசையாக வந்த பல வாகனங்களில் அடிபட்டு இறந்த பரிதாப சம்பவம் பிரித்தானியாவில் நடைபெற்றுள்ளது.
இரண்டு குழந்தைகளின் தாயாகிய Dominique Worrall (32), பரபரப்பான நெடுஞ்சாலையில், வேகமாக செல்லும் காரிலிருந்து இறங்கியதையடுத்து பின்னால் வந்த பல வாகனங்கள் அவர் மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனது காதலரான Terry Dunneஉடன் காரில் பயணிக்கும்போது, அவருக்கும் Worrallக்கும் முந்தைய காதல் தொடர்பில் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே இதற்கு முன்னரும் இருவருக்கும் பிரச்சினையாகி Dunne மீது பொலிசில் புகாரளித்திருக்கிறார் Worrall.
தற்போது நடந்த பிரச்சினையின்போது, கோபத்தில், கார் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது காரின் கதவை திறந்து காரிலிருந்து இறங்கியிருக்கிறார் Worrall.
அது ஒரு நெடுஞ்சாலை என்பதால், பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த பல வாகனங்கள் அவர் மீது மோத, பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார் Worrall.
அவர், தானே காரிலிருந்து இறங்குவது CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், Worrall காரிலிருந்து இறங்கியதும், Dunne காரை நிறுத்தாமலே சென்றிருக்கிறார்.
மறுநாள்தான் அவர் பொலிசில் சரணடைந்துள்ளார். முதலில் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் Dunneஐ கைது செய்த பொலிசார், போதுமான ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீது குற்றச்சட்டு எதையும் பதிவு செய்யவில்லை.
இதற்கிடையில் உடற்கூறு பரிசோதனையில், Worrall போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே Worrallக்கு மன நல பிரச்சினைகள் இருந்ததும், அவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Dunne, Worrallஇன்மரணத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ள நிலையில், பொலிசார் மூன்றாவது நபர் யாருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.