கம்பளை கெந்த கொல்ல கிராமத்தில் தாயுடன் வசித்து வந்த இருபது வயது யுவதியை நள்ளிரவில் சகாக்களுடன் கடத்திச் சென்று திருமணம் செய்ய முயற்சித்த 26 வயதுடைய முன்னாள் பிக்கு உட்பட எட்டு பேரைக் கைது செய்துள்ளதாக குறுந்துவத்தை பொலிஸார் தெரிவித்தனர்
கம்பளை அட்டபாகை பிரதேசத்தைச் சேர்ந்த மூவரும் குறுந்துவத்தையைச் சேர்ந்த இருவர் கொத்மலை பகுதியைச் சேர்ந்த ஒருவர் இறம்பொடையைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட இருவர் அடங்கலாக எட்டு பேரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர் கெந்தகொல்ல கிராமத்தில் உள்ள பௌத்த விஹாரையில் முன்னர் பிக்குவாக இருந்த சந்தர்பத்தில் கடத்தப்பட்ட யுவதியுடன் ஏற்பட்ட காதல் தொடர்பையடுத்து துறவறத்தை கைவிட்டு குடும்ப வாழ்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் குறித்த யுவதி திடீரென சந்தேக நபருடனான காதல் தொடர்பை நிறுத்தியுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது’
இதையடுத்தே சந்தேக நபர் மேற்குறிப்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த தனது சகாக்களை அழைத்துக்கொண்டு கம்பளை அட்டபாகை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்குச் சொந்தமான வேன் ஒன்றில் கடந்த 22 ஆம் திகதி இரவு 12 மணியளவில் யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்
அங்கு உறங்கிக்கொண்டிருந்த குறித்த யுவதியையும் அவரின் தாயையும் வேன் நிறுத்தப்பட்டிருந்த இடம் வரை தூக்கிக்கொண்டு சென்று பின்னர் தாயின் கைகளைக் கட்டி வாயில் பிளாஸ்டரை ஒட்டி வீதி ஓரமாகப் போட்டுவிட்டு யுவதியைக் கடத்தியுள்ளதாகவும்
பின்னர் இறம்பொடைப் பகுதி வீடு ஒன்றுக்குச் சென்ற இவர்கள் அங்கு கடத்தி வரப்பட்ட யுவதிக்கு உடையை மாற்றி வேறொரு வேன் ஒன்றின் மூலம் நுவரெலியா பகுதிக்குக் கொண்டு சென்று அங்கு அறை ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் காலை குறித்த யுவதி அவர்களிடமிருந்து தப்பிச் சென்று தனது தந்தைக்கு தொலை பேசி அழைப்பை ஏற்படுத்து விடயத்தை கூறியுள்ளார்
இவ்விடயம் தொடர்பாக யுவதியின் தந்தை நுவரெலியா மற்றும் குறுந்துவத்தை பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்ததையடுத்தே குறித்த சந்தேக நபர்களை பொலிஸார் நேற்று முன்தினம் மாலை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர்
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேன்கள் இரண்டையும் கம்பளை மாவட்ட நீதி மன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக குறுந்து வத்தை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.