புதுக்கோட்டை அருகே, ஒரு தொன் ஆட்டுக்கறி உணவுடன் நடைபெற்ற மொய் விருந்தில், 4 கோடி ரூபாய் வசூலானது.
தமிழகத்தின் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கிராமங்களில், நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், திருமணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்களும், ‘மொய் விருந்து’ எனும் பெயரில் விருந்து ஒன்றை நடத்துவதுண்டு. இதில், விருந்து நடத்துபவரின் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்துகொண்டு, மொய் செய்வது கடந்த 25 ஆண்டுகளாக நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று 25 ஆம் திகதி வடகாடு கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் மொய் விருந்து நடத்தினார். இதற்காக சுமார் 50 ஆயிரம் அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கப்பட்டது. ஒரு தொன் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு அசைவ விருந்து பரிமாறப்பட்டது. அசைவம் உண்ணாதவர்களுக்கு தனிப்பந்தலில் சைவ உணவு பரிமாறப்பட்டது. உணவு சமைக்கவும், விருந்து பரிமாறவும் சுமார் 100 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இதில் பங்கேற்றவர்கள் வழங்கும் மொய்ப்பணத்தை எண்ணுவதற்காக, தனியார் வங்கி அலுவலர்கள் பணம் எண்ணும் இயந்திரங்களுடன் சேவை மையம் அமைத்திருந்தனர். சுமார் 20 இடங்களில் மொய் எழுதப்பட்டது. வசூல் செய்யப்பட்ட மொய்ப் பணம் தனியார் வங்கி சேவை நிலையத்தில் எண்ணப் பட்டது. அதில் பல போலித்தாள் நாணத்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மொய் எழுதிய இடங்களிலும், வங்கி சேவை நிலையத்தின் அருகிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு நிலைய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த மொய் விருந்திற்காக மட்டும் 15 இலட்சம் வரை கிருஷ்ணமூர்த்தி செலவு செய்துள்ளார். மாலை விருந்து முடிந்த நிலையில், வசூலான மொய்ப் பணம் எண்ணப்பட்டது. அதில், 4 கோடி ரூபா வரை கிடைத்திருந்தது. இந்த ஆண்டில் இதுவரை நடந்த மொய்விருந்துகளில் தனிநபரின் அதிகபட்ச மொய் வசூல் இது என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விருந்தினர்கள் தெரிவிக்கையில்,
“கிருஷ்ணமூர்த்திக்கு அதிகபட்சமாக 7 கோடி ரூபா வரை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாலும், விவசாயம் பாதிக்கப்பட்டதால் விவசாயிகளுக்கான வருமானம் முற்றிலும் முடங்கிவிட்டதாலும் மொய் வசூல் பாதியாக குறைந்துவிட்டது” என்றனர்