மகிந்தவிற்கு மனமார்ந்த நன்றிகள்! மலிங்க உருக்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், அவர் வழங்கிய ஆதரவினால் தான் எதிர்பார்த்ததை விட அதிக காலம் விளையாட முடிந்தது” என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்க தெரிவித்துள்ளார்.

இன்று தனது இறுதி ஒருநாள் சர்வதேச போட்டியில் விளையாடிய அவர், பிரியாவிடை உரையின் போது, இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு பலத்த காயம் ஏற்பட்டபோது, ​​ராஜபக்ஷ அவர்கள் வைத்தியர் எலியந்தா வைட் என்பவரை அறிமுகப்படுத்தினார். அவர் தான் குணமடைய பெரிதும் உதவினார்.

ராஜபக்ச மற்றும் வைத்தியர் எலியந்தா வைட் இல்லையென்றால் தன்னால் தொடர்ந்து விளையாட முடிந்திருக்காது எனவும் லசித்த மலிங்க கூறினார்.

மேலும், ஐ.பி.எல் விளையாடுவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றேன் என்ற கூற்றை அவர் நிராகரித்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தினாலேயே ஒருநாள் மற்றும் டி -20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட தகுதியுடையதாக இருந்தது என்று மலிங்க கூறினார்.

இதேவேளை, ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள தான், டி -20 கிரிக்கெட்டில் தொடர்ந்தும் விளையாடுவேன் என லசித் மலிங்க மேலும் தெரிவித்துள்ளார்.