35 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் கேரள மாநிலத்தில் அனாதை இல்லம் ஒன்றில் ஒப்படைத்துவிட்டு மாயமான தாயாரை தேடி இத்தாலியில் இருந்து இந்தியா சென்றுள்ளார் இளம்பெண் ஒருவர்.
தன்னை பெற்ற தாயாரை ஒரே ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் என கூறும் தற்போது இத்தாலிய குடிமகளான நவ்யா சோபியா,
தாயார் தற்போது ஏழ்மை நிலையில் இருந்தால் அவரை தம்மால் இயன்ற முறையில் காப்பாற்ற வேண்டும் எனவும்,
தாயாரால் தமக்கு நன்மை மட்டுமே இதுவரை நேர்ந்தது என்றும் உணர்ச்சி பொங்க தெரிவித்துள்ளார் அவர்.
கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று, பெற்ற தாயாரை ஒருமுறையேனும் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் கணவருடன் இந்தியாவுக்கு சென்ற சோபியாவுக்கு அப்போதும் ஏமாற்றமே மிஞ்சியது.
இருப்பினும் மனம் தளராத சோபியா சமூகவலைதளம் வாயிலாக தொடர்ந்து தேடி வருகிறார்.
1984 மார்ச் மாதம் 31 ஆம் திகதி கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் அமைந்துள்ள அனாதை இல்லம் ஒன்றில் சோபியா பிறந்துள்ளார்.
பிறந்ததும் பிள்ளையை அந்த இல்லத்தில் ஒப்படைத்துவிட்டு, தாயார் மாயமானதாக கூறப்படுகிறது. பின்னர் சோபியாவுக்கு 2 வயதாகும் வரை அதே இல்லத்தில் வளர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இத்தாலியர்களான சில்வானோ டொரிகாட்டியும் அவரது மனைவி திசியானாவும் சோபியாவை தத்தெடுத்து இத்தாலிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
சோபியாவுக்கு 9 வயதான போது தமது இத்தாலிய பெற்றோரிடம் கேட்ட ஒரு கேள்வியே, அவரை மீண்டும் இந்தியாவுக்கு செல்ல தூண்டியுள்ளது.
தனக்கு ஏன் தனது பெற்றோரின் நிறம் இல்லை என்ற கேள்விக்கு, அவர்கள் தத்தெடுத்த கதையை சோபியாவிடம் விளக்கியுள்ளனர்.
இதனிடையே சோபியாவின் நலம் விசாரித்து கேரளாவில் இருந்து வந்த கடிதங்களை சேகரித்த சோபியா, தமது பெற்ற தாயார் குறித்து விசாரணையை துவங்கியுள்ளார்.
அதன் ஒருபகுதியாகவே அவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சென்றுள்ளார். அப்போது தாயார் மற்றும் பாட்டியின் பெயரும் பிறந்த நாள் உள்ளிட்ட தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
இதில் தாம் பிறக்கும்போது தமது தாயாருக்கு 19 வயது என சோபியா புரிந்துகொண்டுள்ளார்.
மட்டுமின்றி இதனையடுத்து தமது பெயருடன் தாயாரின் பெயரின் ஒருபகுதியான நவ்யா என்ற வார்த்தையையும் சோபியா சேர்த்துக் கொண்டார்.
தற்போது பேஸ்புக் குழுக்களில் தமது தாயார் தொடர்பில் தகவல்களை தொகுத்த காணொளி ஒன்றை பகிர்ந்து உதவி கோரி வருகிறார்.