தமிழகத்தில் மொய்விருந்தின் மூலம் ரூ.4 கோடி வசூலித்துள்ளார் விவசாயி ஒருவர்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், வடகாடு சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த 25 ஆண்டுகளாக மொய்விருந்து களை கட்டி வருகிறது.
நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்கள் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு.
இதில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது.
வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி நேற்று பிரமாண்டமான அளவில் மொய் விருந்து நடத்தினார்.
சுமார் 50 ஆயிரம் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு சொந்த பந்தங்களுக்கு சொல்லப்பட்டதுடன், ஒரு டன் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டுள்ளது.
இது தவிர சைவ பிரியர்களுக்காக சைவ சாப்பாடும் தடபுடலாக தயாரான நிலையில் 20 இடங்களில் மொய் வாங்கப்பட்டது.
இதற்காக தனியார் வங்கி அலுவலர்கள் பணம் எண்ணும் எந்திரங்களுடன் சேவை மையத்தை அமைத்திருந்தனர்.
மொய் எழுதிய இடங்களிலும், வங்கி சேவை மையத்தின் அருகிலும் துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாப்பு மைய வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மாலை விருந்து முடிந்த நிலையில் வசூல் செய்யப்பட்ட மொய் பணம் எண்ணப்பட்டது, அதில் ரூ.4 கோடி வரை கிடைத்திருந்தது. இந்த ஆண்டில் இதுவரை நடந்த மொய்விருந்துகளில் தனிநபரின் அதிகபட்ச மொய் வசூல் இது என்று கூறப்படுகிறது.