துப்பாக்கியுடன் பிடிபட்ட அமெரிக்கர்: தலைவிதியே மாறிய சோகம்!

அமெரிக்காவிலிருந்து ஜப்பான் சென்ற ஒருவர், தனது சூட்கேசில் குண்டுகள் நிரம்பிய துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார். Michael Edward (43) ஜப்பானிலுள்ள Okinawa நகரில் அமெரிக்க கடற்படை சார்பாக தீயணைப்பு வீரராக பணியில் சேருவதற்காக புறப்பட்டார்.

அமெரிக்காவின் Seattleஇல் இருந்து ஜப்பானின் Narita விமான நிலையம் சென்றிறங்கியபோது அவரது தலைவிதியே மாறிப்போனது.

Naritaவிலிருந்து அவர் அடுத்து Okinawaவுக்கு விமானம் ஏற வேண்டும், ஆனால் அங்கு எதிர்பாராத பிரச்சினை ஒன்றை சந்திக்க வேண்டி வந்தது.

Michaelஇன் உடைமைகளை சோதனையிட்ட அதிகாரிகள் அவரது சூட்கேசுக்குள் ஒரு கைத்துப்பாக்கி இருந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

விசாரித்தபோது, அந்த துப்பாக்கி தன்னுடையதுதான் என்று ஒப்புக் கொண்ட Michael, ஆனால் அது எப்படி தனது சூட்கேசுக்குள் வந்தது என்பது தனக்குத் தெரியாது என்றும், தவறுதலாக தான் அதை சூட்கேசுக்குள் வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ஆனால், ஜப்பானைப் பொருத்தவரையில் துப்பாக்கியை தங்கள் உடைமைகளுடன் வைக்காமல், தனியே வைத்திருக்க வேண்டும். எனவே தனது சூட்கேசுக்குள் Michael துப்பாக்கியை வைத்திருந்தது, பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, அந்த துப்பாக்கியில் 14 குண்டுகள் நிரப்பப்பட்டிருந்ததோடு, மேலும் 14 குண்டுகள் நிறைந்த ஒரு மேகஸினும் அந்த சூட்கேசுக்குள் இருந்ததால் Michaelக்கு பிரச்சினைதான்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், Michael 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை சிறை செல்ல வேண்டியிருக்கும்.

புதிய வேலையில் சேருவதற்காக புறப்பட்ட Michaelஇன் சூட்கேசில் இருந்த துப்பாக்கி, அவரது தலைவிதியையே மாற்றிவிட்டது.