தமிழகத்தில் குடும்ப பிரச்சினையில், மகன்-மகளை கொன்று விட்டு தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). இவரது மனைவி தேவி (32). தம்பதியினருக்கு ஜனனி (8), ஜெயமித்திரன் (3) என்ற குழந்தைகள் இருந்தனர்.
ரமேஷ், சென்னையில் தங்கி ஒரு ஹொட்டலில் வேலை பார்த்து வருகிறார். தேவி தனது குழந்தைகளுடன் ஊரிலேயே வசித்து வந்தார். தேவிக்கும், அவரது மாமியார் மல்லிகா (65) என்பவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாமியாருக்கும், மருமகளுக்கும் இடையே குடும்ப பிரச்சினையால் சண்டை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தேவி, தனது 2 குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் மல்லிகா மற்றும் அக்கம் பக்கத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்தில் குழந்தைகள் ஜெயமித்திரன், ஜனனி ஆகியோர் பிணமாக மிதந்தனர். மேலும், அந்த குளத்தின் அருகே உள்ள ஒரு மரத்தில் தேவி தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதை பார்த்த மல்லிகா மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலங்களை கைப்பற்றிவிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மாமியாருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய தேவி, தனது குழந்தைகளை குளத்தில் உள்ள தண்ணீரில் அமுக்கி கொலை செய்து விட்டு பின்னர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
பொலிசார் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.