இளம் தாயாரின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய அந்த சந்திப்பு!

மாணவ பருவத்தில் காதல் திருமணம், அதன் பிறகு விவாகரத்து என எஞ்சிய வாழ்க்கை கைவிட்டு சென்றுவிடும் என்ற நிலையில், இளம் தாயார் ஒருவரின் வாழ்க்கையை தலை கீழாக மாற்றிய சம்பவம் தொடர்பில் அவரே வெளியிட்ட பதிவு பலருக்கும் உந்து சக்தியாக அமைந்துள்ளது.

பெயர் குறிப்பிடாத அந்தப் பெண்மணிக்கு 12 ஆம் வகுப்பு முடிந்த அடுத்த ஆண்டு திருமணம் முடிந்துள்ளது.

காதலரையே அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் திருமணத்திற்கு பின்னர், எல்லாமே தலை கீழானது.

மேற்படிப்புக்கு விருப்பம் இருந்தும், காதல் கணவருக்கு அதில் விருப்பமில்லை. மட்டுமின்றி வேலைக்கும் செல்ல வேண்டாம் என அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்துள்ள வாழ்க்கையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகளும் மோதல்களும் அதிகரித்தது.

இதனிடையே பெண் பிள்ளைக்கு அவர் தாயாகியுள்ளார். அடுத்த 7 ஆண்டுகள் தமது மகள் மட்டுமே அந்த நரக வாழ்க்கையில் ஒரு ஆறுதல் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தமது வாழ்க்கையில் எந்த மாறுதலும் ஏற்படாது என முடிவு செய்த அவர் தமது காதல் கணவரிடம் இருந்து விவாகரத்து கோரியுள்ளார்.

தொடர்ந்து தந்தை தமக்கு அளித்த குடியிருப்பு ஒன்றில் மகளுடன் தனியாக குடியேறியுள்ளார். இந்த காலகட்டத்தில் தந்தையே உதவி செய்து வந்துள்ளார்.

இதனிடையே அழகுக்கலையில் நிபுணரான அவர், வேலைக்கு செல்லும் இடத்தில் தமது மகளையும் கூடவே கொண்டு சென்றுள்ளார்.

அந்த காலகட்டத்தில் அவர் சஞ்சயைப் பார்க்கிறார். இவர் பணியாற்றும் அலுவலகத்தின் எதிர் கட்டிடத்தில் சஞ்சய் அப்போது குடியிருந்து வந்துள்ளார்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்திருந்தாலும் பேசியதில்லை. ஒருநாள் தொலைபேசியில் அழைத்த சஞ்சய், இருவரும் ஒன்றாக இரவு சாப்பிட செல்லலாமா என அனுமதி கோரியுள்ளார்.

ஒருவழியாக ஒப்புக்கொண்ட அவர், முதன் முறையாக இருவரும் உணவு விடுதி ஒன்றில் சந்தித்து பேசியுள்ளனர்.

முதற் சந்திப்பிலேயே காதல் வயப்பட்ட இருவரும், சில ஆண்டுகள் அந்த காதலை கொண்டாடியுள்ளனர்.

ஒரு நாள், அவர் திருமணம் குறித்து பேசியபோது தாம் பயந்ததாகவும், தமக்கு ஒரு மகள் இருக்கிறார் என கூறியதாகவும், ஆனால் அது தமக்கு ஒரு பிரச்னையே அல்ல என சஞ்சய் தெரிவித்ததாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு இருவரும் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

திருமணம் முடித்து தற்போது 26 ஆண்டுகள் கடந்ததாக கூறும் அவர், இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வுகள் ஏற்பட்டது, ஆனாலும் இருவருக்கும் இடையேயான அன்பும் மரியாதையும் அரவணைப்பும் இதுவரை குறையவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே இரண்டு பெண் பிள்ளைகளுக்கு மீண்டும் தாயாரான அவர், வாழ்க்கையில் புயல் அடித்தாலும், அது வாழ்க்கையின் இறுதி அல்ல என்பதை உணர்ந்து, அது அப்போதைய பிரச்னை மட்டுமே என புரிந்து கொள்ள வேண்டும் என தாம் கற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.