8 இளைஞர்கள்… 3 நிமிடத்தில் மாயமான 680 கிலோ தங்கம்!

பிரேசில் நாட்டின் சாவ் பாலோ பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சூரிச் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டிருந்த சுமார் 680 கிலோ தங்க கட்டிகளை 8 பேர் கொண்ட கும்பல் கொள்ளையிட்டு தப்பியுள்ளது.

பிரேசில் நாட்டை உலுக்கிய பெரும் கொள்ளை சம்பவங்களில் இது இரண்டாவது என கூறப்படுகிறது.

வியாழனன்று மதியம் பொலிசாரின் வேடத்தில் வாகனங்களில் விமான நிலையம் சென்ற 8 இளைஞர்களும்,

முகத்தின் சில பாகங்களை மட்டும் மறைக்காமல் உடல் முழுவதும் மறைக்கும் வகையிலான உடைகளை உடுத்தி இருந்துள்ளனர்.

சரக்கு அனுப்பும் பகுதிக்கு சென்ற நால்வர், தங்களை உயர் அதிகாரிகள் என அரிமுகப்படுத்திய பின்னர், அங்குள்ள ஊழியர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

தொடர்ந்து அங்குள்ள ஊழியர்களே, இவர் சுட்டிக்காட்டிய வாகனங்களில் தங்க கட்டிகளை மாற்றியுள்ளனர்.

இந்த நால்வரில் ஒரு இளைஞரின் கையில் துப்பாக்கி இருந்ததாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, சந்தேகம் எழுப்பிய இரு ஊழியர்களை இவர்கள் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில் பாதுகாக்கப்பட்ட தங்கமானது சூரிச் மற்றும் நியூயார் நகரங்களுக்கு அனுப்ப தயாரான நிலையில் இருந்தவையாகும்.

திட்டமிடப்பட்டு, கும்பலாக மேற்கொள்ளப்பட்ட இந்த கொள்ளை தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

தங்கம் அனுப்பும் நிறுவனதின் முக்கிய நிர்வாகியின் குடும்பத்தை மிரட்டி, அவரிடம் இருந்து தகவல்களை சேகரித்து, இந்த கொள்ளையில் அந்த கும்பல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

போலியான பொலிஸ் வாகனங்கள் இருமுறை மாற்றிய பின்னர் தங்கள் சொந்த வாகனங்களில் தங்க கட்டிகளுடன் மாயமாகியுள்ளனர்.

வெறும் 3 நிமிட இடைவெளியில் 8 பேர் கொண்ட கும்பல் 680 கிலோ தங்கத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளது திரைப்படங்களையே மிஞ்சும் வகையில் உள்ளது.

பிரேசில் நாட்டில் கடந்த 2005 ஆம் ஆண்டு அந்த நாட்டை உலுக்கிய கொள்ளை சம்பவம் அரங்கேறியது.

மத்திய வங்கியில் சுரங்கம் வழியாக நுழைந்த கும்பல் ஒன்று அங்கிருந்து சுமார் 67 மில்லியன் டொலர்களை கொள்ளையிட்டு தப்பினர்.