கட்டிவைத்து அடித்த கடத்தல்காரன்… சாமர்த்தியமாக தப்பிய வீராங்கனை

மர்ம நபரால் கடத்தப்பட்ட விளையாட்டு வீராங்கனை ஒருவர் சாமர்த்தியமாக பேசியே, தப்பி வந்துள்ள ஆச்சர்ய சம்பவம் ஆஸ்திரிய நாட்டில் நடைபெற்றுள்ளது.

ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த தொழில்முறை விளையாட்டு வீராங்கனையான நத்தலி பிர்லி (27), செவ்வாய்க்கிழமையன்று மாலை 5 மணியளவில் தன்னுடைய வீட்டிற்கு திரும்பி கொடிருந்துள்ளார்.

அப்போது திடீரென சிவப்பு நிறத்திலான கார் அவருடைய பின் பக்கம் வேகமாக மோதியது. இதில் அவருடைய கை உடைந்து வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார்.

அந்த சமயத்தில் காரில் வந்த நபர் ஒரு மரக்கட்டையை எடுத்து நத்தலியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். லேசாக மயக்கமடைந்த நத்தலியை காரின் பின் பக்கத்தில் அந்த நபர் அடைத்துள்ளான். மயக்கம் தெளிந்து நத்தலி விழித்து பார்த்த போது நிர்வாணமாக ஒரு நாற்காலியில் கட்டி வைக்கப்பட்டிருந்துள்ளார்.

பாழடைந்த அந்த வீட்டில் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. கையில் கத்தியுடன் அந்த வந்த மர்ம நபர், நான் கூறுவதை கேட்டு நடந்துகொண்டால் நாளை உன்னை வீட்டில் விட்டு விடுவேன்.

அப்படி செய்ய தவறினால் உன்னை கொலை செய்துவிடுவேன் எனக்கூறி, கழுத்தை நெரித்து நீரில் மூழ்கடிக்க முயற்சித்துள்ளான். உடனே நத்தலி அவனுடைய மிரட்டலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

அந்த நபர் நத்தலியை மது குடிக்குமாறு அடித்து கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தியுள்ளான். அதன்பிறகு, நான் ஒரு தோட்டக்காரன். என் தந்தை இறந்துவிட்டார். தாய் ஒரு குடிகாரியாக மாறிவிட்டார் என்றும், காதலி ஏமாற்றி சென்றுவிட்டதாகவும் கூறி வேதனையுடன் பேசியுள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட நத்தலி, அந்த மனிதன் மீது இரக்கம் காட்டுவதை போல பேச ஆரம்பித்துள்ளார். வாழ்க்கையின் மறுபக்கத்தை பற்றி அவர் பேசியதும், அதில் மயங்கிய அந்த நபர் நத்தலியின் கை கட்டுகளை அவிழ்த்துவிட்டு ஆடைகளை உடுத்திக்கொள்ள அனுமதித்துளார்.

பின்னர் நத்தலி கேட்டுக்கொண்டதால் வாசல் வரை அழைத்து சென்றுள்ளார். இதற்கிடையில் செல்போன் சிக்னலை வைத்து தேடுதல் வேட்டை நடத்திக்கொண்டிருந்த பொலிஸார், சம்பவ இடத்தை அடைந்து 33 வயது நபரை கைது செய்தனர்.

இந்த நிலையில் தனக்காக பிராத்தனை செய்த அனைவருக்கும் நத்தலி நன்றி தெரிவித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.