அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், நிறவெறியை தூண்டும் வகையில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அவ்வப்போது நிறவெறியை தூண்டும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து வருகிறார். அண்மையில் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் 4 பேரை, பூர்வீக நாட்டுக்கு திரும்பி செல்லுமாறு கூறி சர்ச்சையில் சிக்கினார்.
இதற்கு பல்வேறு கண்டனங்கள் மற்ற நாடுகளின் தலைவர்களிடம் இருந்தும் எழுந்தன. இந்நிலையில், மீண்டும் நிறவெறியை தூண்டும் வகையிலான கருத்து ஒன்றை டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர் நகரம் குறித்து டிரம்ப் கூறுகையில், ‘பால்டிமோர், எலிகளால் கொறிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் சிதறிக் கிடக்கும் அருவருப்பான நகரம்.
மனிதர்கள் யாரும் அங்கு வசிப்பதற்கு விரும்ப மாட்டார்கள். அமெரிக்காவிலேயே அது மோசமான நகரம். மெக்சிகோ எல்லையில் இருக்கும் அகதிகளைக் காட்டிலும் மோசமானவர்கள் வசிக்கும் நகரம்’ என தெரிவித்தார்.
பால்டிமோர் நகரை சேர்ந்தவரும், கருப்பினத்தவருமான ஜனநாயக கட்சி எம்.பி.எலிஜா கம்மிங்ஸ் என்பவரை குறி வைத்தே டிரம்ப் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
புள்ளி விவரங்களின்படி, பால்டிமோர் நகர் மக்கள் தொகையில் 52 சதவிதம் பேர் கருப்பினத்தவர்கள் ஆவர். எனவே, டிரம்பின் இந்த கருத்து பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.