உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவிய பின், அணிக்குள் பிரச்சினை இருப்பதாக தகவல் வெளியானது. துணை கேப்டன் ரோகித் சர்மாவின் ஆலோசனையை விராட் கோலி கேட்கவில்லை என்பதால் தான் பிரச்சினை என்றும் கூறப்பட்டது.
அணிக்குள் இரு பிரிவுகளாக ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக சில வீரர்களும், கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக சில வீரர்களும் இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கேப்டன், துணை கேப்டன் இடையிலான மோதலால் இப்போது பிரிவு அதிகரித்து இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது.
மோதல் என்பது கற்பனையான கதை என்றே அனைவரும் நினைத்த வேளையில், இது உண்மை தான் என்பதனை நிரூபிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா, கேப்டன் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருவதை நிறுத்தியுள்ளார். அதேபோல கேப்டன் விராட் கோலியின் பக்கத்தினை பின்தொடர்வதை முன்பே நிறுத்திகிவிட்டார். ரோகித்தின் மனைவி ரித்திகாவும் அனுஷ்காவை பின் தொடர்வதில் இருந்து விலகியுள்ளார். இதனால் பிரச்சினை இருப்பது உண்மைதானோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழ ஆரம்பித்துவிட்டது. விராட், அனுஷ்காவைப் பின் தொடர்வதில் இருந்து ரோகித் விலகினாலும், விராட் கோலி, ரோகித்தை பின்தொடர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய் பேசும்போது “ரோகித் சர்மா, விராட் கோலி இடையிலான பிரச்சினை என்பது உங்களால் உருவாக்கப்படும் கற்பனை கதை” என்றார்.
இந்நிலையில், இவர்களது பிரச்சினையை உறுதிபடுத்தும் விதமாக, சமீபத்தில் அனுஷ்கா சர்மாவின் வலைத்தள பதிவு அமைந்தது. புத்திசாலி மனிதன் இந்த நேரத்தில் அமைதியாகத்தான் இருப்பான். தவறான தகவல்கள் வெளிவரும்போது உண்மையால் மட்டுமே மவுனத்துடன் கைகுலுக்க முடியும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் தான் இருவருக்கும் இடையிலான பிரச்சனைக்கு என்ன தான் காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது
முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் போது இந்திய வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் 15 நாட்கள் மட்டுமே தங்கிக்கொள்ள கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அனுமதி வழங்கியது. ஆனால் அனுமதியை மீறி மூத்த வீரர் ஒருவர் உலக கோப்பை போட்டி முழுவதும் தனது மனைவியை தன்னுடன் தங்க வைத்திருந்ததாக ஒரு வாரம் முன்பே தகவல் வெளியானது. அந்த வீரர் ரோகித் சர்மா தான் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன. இதனையடுத்து பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் அனுமதி இல்லாமல் மனைவியை தங்கவைத்தது குறித்து பிசிசிஐ விசாரணை நடத்தியது.
இது குறித்து கேப்டன் கோலி, ரோகித் இடம் விசாரிக்க, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் உலக கோப்பை தொடர் முடிந்து இந்திய அணி நாடு திரும்பும் முன்னரே, ரோகித் சர்மா தனது மனைவியுடன் தனியாக முன்கூட்டியே இந்தியா திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்னைகளுக்கிடையே, இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர், மூன்று ஒரு நாள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றது. இதில் முதல் இரண்டு 20 ஓவர் ஆட்டங்கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் வருகிற 3 மற்றும் 4-ந்தேதி நடக்க உள்ளது.
இருவருக்கும் இடையேயான பிரச்சினை இருக்கும் போது, ஒன்றாக இருந்தால் அணியின் முன்னேற்றத்தை பாதிக்கும் என்பதால், பிசிசிஐயின் சி.இ.ஓ. சில நாட்களில் அமெரிக்கா சென்று இருவரையும் நேரில் சந்தித்து சமாதானப்படுத்த இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வீரர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு ஆனது கோலி மனைவி அனுஷ்காவின் சமூக வலைதள பதிவால் புயலை கிளப்பியுள்ளது. இந்த புயல் நீடிக்குமா? சமாதானம் ஆகுமா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.