தமிழ்நாட்டில் மனைவி வேறு நபரை மணந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் சொகுசாக வாழ்ந்த அரசு ஊழியர் பிச்சைக்காரராக மாறியது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பேருந்து நிலையம் பகுதியில் ஒருவர் பிச்சை எடுத்து வந்தார். அவரை மீட்கும் நடவடிக்கையில் அட்சயம் அறக்கட்டளையை சேர்ந்த இளைஞர்கள் முடிவு செய்தனர். இதனால் அவரிடம் சென்று விசாரித்தனர்.
அப்போது அவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சிவக்குமார் என்பதும், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் ஊழியராக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
ஒரு அரசு ஊழியர் இப்படி பைத்தியம் பிடித்து பிச்சைக்காரராகியதற்கு என்ன காரணம் என்று அந்த அறக்கட்டளையைச் சேர்ந்த இளைஞர்கள் விசாரித்துள்ளனர். அப்போது தான் அந்த திடுக்கிடும் தகவல் கிடைத்தது.
மீட்கப்பட்ட சிவக்குமாருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. அவருக்கு குழந்தை இல்லை. திருமணமான 3 ஆண்டுகளில் அவருடைய மனைவி பிரிந்து சென்று, வேறு திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இதனால் சிவக்குமார் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார். அவரால் அந்த துயரத்தில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை.
அதன்பிறகு மது குடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகினார். அரசு வேலையையும் அவரால் செய்ய முடியவில்லை. ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்தநிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தில் மீட்கப்பட்ட அவர் அணைக்கும் கரங்கள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார்.