தமிழகத்தில் ஆசைப்பட்ட பாடம் கிடைக்காததால், மனமுடைந்த பள்ளி மாணவி பள்ளியில் இருந்து விலகி ஆடு மேய்க்க முடிவெடுத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பூதலாபுரத்தில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளி முதலில்
உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டு மேல்நிலை பள்ளியானது.
இதனால் இந்த பள்ளியை சுற்றியிருக்கும் ஏழை மாணவ-மாணவிகள் சுமார் 400-க்கும் மேற்பட்டவர்கள் இங்கு படித்து வருகின்றனர்.
குறிப்பாக இதில் பிளஸ்-1ல் 54 பேரும், பிளஸ்-2வில் 55 பேரும் இந்த கல்வியாண்டில் படித்து வருகிறார்கள்.
இதில் வைஷ்ணவி(16) என்ற மாணவி 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு 11-ஆம் வகுப்பிற்கு அடியெடுத்து வைத்தார்.
அப்போது அவர் தன் குடும்பத்தின் சூழ்நிலையை புரிந்து கொண்டு, தனக்கு எந்த பாடம் வருமோ அதை எடுத்து, நன்றாக படித்து பெற்றோரை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.
இதனால் தலைமை ஆசிரியரை பார்த்து, எனக்கு வரலாறு பாடம் என்றால் பிடிக்கும், தயவு செய்து அந்த பாடப்பிரிவில் என்னை சேர்த்துவிடுங்கள் என்று கேட்டுள்ளார்.
அப்போது ஆசிரியரும் உன் ஆசை நியாயமானதுதான். ஆனால் அந்த பிரிவு நிரம்பி விட்டது. வேண்டுமென்றால் கம்ப்யூட்டர் சயின்ஸ் உள்ளது அதில் சேர்ந்து கொள் என்று கூற மாணவி வைஷ்ணவியோ, கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க எனக்கு விருப்பமில்லை. எப்படியாவது கருணை காட்டி நான் கேட்ட வரலாற்று பாடத்தை தாருங்கள் என்று கெஞ்சியுள்ளார்.
ஆனால் தலைமை ஆசிரியர் அதில் வாய்ப்பில்லை என்று உறுதியாக சொல்லி விட்டதால். மாணவி விருப்பமில்லாத கம்ப்யூட்டர் சயின்ஸ்சில் சேர்ந்தார். ஆனால் அதில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை.
கவனம் செலுத்த முடியாத படிப்பு படித்தால் என்ன? படிக்கவில்லை என்றால் என்ன? என்பது போல்,
பள்ளியில் இருந்து வெளியேறிபெற்றோரிடம் நடந்தது பற்றி கூறியுள்ளார்.
அதன் பின் தங்கள் வீட்டு ஆடுகளை வெளியில் சென்று வைஷ்ணவி மேய்த்து வந்தார். இந்த தகவல் எப்படியோ அயன்வடமலாபுரம் சமூக சேவகர் வரதராஜன்(45) கவனத்திற்கு செல்ல, அவர் உடனே இதுதொடர்பாக கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ஆகியோரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்து, அதில் மாணவியின் நிலையைப் பற்றி கூறியுள்ளார்.
இந்த தகவல் வாட்ஸ் அப்பிலும் வைரலாக பரவியது. இதனால் கலெக்டர் சந்தீப் நந்தூரி கல்வி அதிகாரிக்கு உத்தரவிடவே அவர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார்.
மீண்டும் அந்த மாணவி கேட்கும் பாடம் கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவி வைஷ்ணவி மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
மாணவி வைஷ்ணவி தவிர அதே பகுதியை சேர்ந்த ரகுபதி, அமிர்தகணேசன், உத்திரகுமார், பானுமதி, ராஜலட்சுமி ஆகிய 5 பேரும் வரலாற்று பாடம் கிடைக்காததால் அவர்களும் வைஷ்ணவியைப்போன்று பள்ளியை விட்டு விலகி சென்றுவிட்டனர். அந்த 5 மாணவர்களுக்கும் அவர்கள் விரும்பிய பாடம் வழங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.