லண்டனில் இருந்து சென்னைக்கு வந்து பெற்ற தாயை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மகன் மூன்று மாதங்களுக்கு பிறகு டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர் குழந்தைவேலு. முன்னாள் அதிமுக எம்.பி-யான இவர் 4 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.
இதையடுத்து இவரது மனைவி ரத்தினம் (63) சென்னை பெசன்ட் நகரில் உள்ள சொந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் திகதி ரத்தினம் வீட்டில் மர்மமான கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
பொலிசார் விசாரணையில் சொத்துப் பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட தகராறில் லண்டனிலிருந்து வந்திருந்த அவரது மகன் பிரவீன், தாய் ரத்தினத்தை கொலை செய்தது தெரியவந்தது.
பிரவீன் பிரித்தானிய குடியுரிமை பெற்று அந்த நாட்டில் வசித்து வந்த நிலையில், சொத்து பிரச்சனைக்காக சென்னைக்கு வந்ததும் உறுதியானது.
இது தொடர்பாக பொலிசார் வழக்குப் பதிவு செய்து, 3 தனிப்படைகள் அமைத்து, பிரவீனை தேடி வந்தனர். மேலும் பிரவீன் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அவரது பாஸ்போர்டை முடக்கி இருந்தனர்.
இந்நிலையில், பிரவீன் செல்போன் எண்ணை ஆய்வு செய்த பொலிசார் கொலைக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ ஓட்டுனர் சத்தியஜோதி மற்றும் அவருடைய மனைவி ராணி ஆகிய இருவரையும் கடந்த மே மாதம் கைது செய்தனர்.
இதனிடையே பிரவீனை பிடிக்க சைபர் கிரைம் பொலிசார் உதவியுடன், தனிப்படை பொலிசார் தீவிரமாக முயற்சி மேற்கொண்டனர்.
அப்போது பிரவீன், டெல்லியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை பொலிசார் நேற்று பிற்பகலில் பிரவீனை கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட பிரவீன், அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தெரியவந்துள்ளது.