கனடாவில் நடைபெற்று வரும் குளோபல் டி20 தொடரில், பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி 40 பந்துகளில் 81 ஓட்டங்கள் விளாசி மிரட்டினார்.
குளோபல் டி20 தொடரில் பல நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்கள் விளையாடி வருகின்றனர். குறிப்பாக கிறிஸ் கெய்ல், யுவ்ராஜ் சிங், டூ பிளிசிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானின் முன்னாள் வீரரான ஷாகித் அப்ரிடி, பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம் நடந்த போட்டியில் பிராம்ப்டன் வுல்வ்ஸ்-எட்மோண்டன் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பிராம்ப்டன் வுல்வ்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்கள் குவித்தது. சிம்மோன்ஸ் 34 பந்துகளில் 59 ஓட்டங்கள் குவித்தார். எனினும் சில வீரர்கள் சொதப்பிய நிலையில், ஷாகித் அப்ரிடி அதிரடியில் மிரட்டினார்.
சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசிய அவர் 40 பந்துகளில் 81 ஓட்டங்கள் விளாசினார். இதில் 5 சிக்சர்கள், 10 பவுண்டரிகள் அடங்கும். இதில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 202.50 ஆகும். 39 வயதில் அதிரடி காட்டிய அப்ரிடியின் ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
பின்னர் ஆடிய எட்மோண்டன் ராயல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 180 ஓட்டங்கள் எடுத்து தோல்வியடைந்தது. அப்ரிடி ஒரு விக்கெட் வீழ்த்தியதால் ஆட்டநாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.